தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மாலத்தீவு மற்றும் அந்தமானில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதாகவும், மாலத்தீவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் பாலசந்திரன் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை இருக்குமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அம்மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 28.6 சென்டி மீட்டர் மழை பதிவானது. பச்சையாறு பகுதியில் 12.5 சென்டி மீட்டர் மழை பெய்த நிலையில், அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தமிழா குறிச்சி தடுப்பணை நிறைந்து, அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி உடைந்தது.
தமிழா குறிச்சி அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதி, ஏற்கெனவே உடைந்து அந்த இடத்தில் மணல் மூட்டை போடப்பட்டிருந்தது. தற்போது திடீரென பெய்த மழையால், மணல் மூட்டைகள் அடித்து செல்லப்பட்டன. ஆண்டுதோறும் தடுப்பணை உடைவதாகவும் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாபாநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 16 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், அணைக்கு நீர்வரத்து 4,748 கன அடியாக உயர்ந்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒரே நாளில் அணை நீர்மட்டம், 6 அடி உயர்ந்தது.
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு தொடங்கிய மழை, காலையிலும் தொடர்ந்தது. மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், 22 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், இன்று அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monsoon rain, Rain