• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பட்டா இல்லாத பழங்குடிகளை காட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

பட்டா இல்லாத பழங்குடிகளை காட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்!

இந்தியா முழுவதும் வனப்பகுதியில் வசிக்கும் பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 11,27,446 குடியிருப்புகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு. 

இந்தியா முழுவதும் வனப்பகுதியில் வசிக்கும் பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 11,27,446 குடியிருப்புகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு. 

தமிழகத்தில் மட்டும் 9029 குடியிருப்புககைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியா முழுவதும் வனப்பகுதியில் வசிக்கும் பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 11,27,446 குடியிருப்புகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு. 

பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பர்ய வனவாழ் மக்கள் (வன உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம் 2006' -ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. சுருக்கமாக, இது 'வன உரிமைச் சட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி 2005 டிசம்பா 13-ல் தேதிக்கு முன்பாகக் காடுகளில் வசிக்கும், விவசாயம் செய்துவரும் பழங்குடியினருக்கு அந்த நிலங்கள் பட்டாவாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Wildlife first என்ற அமைப்பு 2008-ம் ஆண்டில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினால் மிகப்பெரிய அளவில் காடுகள் அழிப்பு ஏற்படும் அதனால் காட்டு விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அப்படியே சட்டத்தை அமல்படுத்தி இருந்தாலும் கூட வனப்பகுதியில் பட்டா இல்லாமல் வசிக்கும் பழங்குடி மக்களை உடனடியாக அந்தந்த மாநிலங்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 13-ம் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்தியாவில் உள்ள 16 மாநிலங்கள் தங்கள் வனப்பகுதியில் இருக்கும் பழங்குடிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா மனுக்களின் எண்ணிக்கை, நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஒட்டுமொத்தமாக 16 மாநிலங்களிலும் சேர்த்து 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் இந்த வழக்கில் உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் 11,27,446 பேரின் பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அவர்களை ஏன் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றவில்லை என்பது தொடர்பான அறிக்கையை வழக்கின் அடுத்த விசாரணையின்போது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வழக்கின் அடுத்த விசாரணைக்குள் பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்ட அனைவரையும் வனப்பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியிருக்க வேண்டும் அப்படி செய்ய தவறினால் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று கூறி வழக்கை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்ந்து பழங்குடியினர் நலனுக்காக செயல்பட்டு வருவதாக கூறி வரும் மத்திய அரசு வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி 13-ம் தேதி நடந்தபோது அரசு சார்பில் வழக்கறிஞரைக்கூட ஆஜர்படுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த சட்டம் என்பதால் மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பழங்குடியினர் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் " பழங்குடிகள் பட்டா நிராகரிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் உள்ளது. முதலில் வன உரிமைச் சட்டத்தின்கீழ் பயன்பெறக்கூடிய வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து பழங்குடியினரிடமும் பட்டா மனுக்கள் முழுமையாக பெறப்படவில்லை.

பெறப்பட்ட குறைந்த மனுக்களையும் மிகச் சாதாரண குறைகளைச் சொல்லி நிராகரித்துள்ளனர் நிராகரிக்கப்பட்ட மனுக்கள்மீது 60 நாட்களுக்குள் தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், அந்த விவரம் கூட பல பழங்குடிகளுக்கு தெரியாது ஆகவே அவர்களுக்கு அந்த வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க வனப் பகுதிகளுக்குள் நிலக்கரி சுரங்கங்கள் நெடுஞ்சாலைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வனப்பகுதியில் இருக்கும் பழங்குடியினர் நிறைவேற்றும் கிராமசபை தீர்மானங்களால் இது போன்ற திட்டங்களுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுகிறது.

இந்த மாதிரியான உத்தரவின் மூலம் வனப்பகுதியில் இருந்து பழங்குடியினரை வெளியேற்றிவிட்டால் நிலக்கரி சுரங்கங்கள், குவாரிகள், நெடுஞ்சாலைகள் போன்றவற்றை எளிதாக செயல்படுத்தலாம் என்ற நோக்கிலேயே மத்திய அரசு இந்த வழக்கில் தங்களது வழக்கறிஞரை கூட ஆஜர்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் வாழும் பழங்குடியினரின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதில் மனுவில் தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதியில் வசிப்பவர்களில் 31,821 மனுக்கள் பட்டியல் பழங்குடியினரிடமிருந்தும்(ST), 2481 மனுக்கள் டிசம்பர் 13, 2005-க்கு முன்பாக இருந்து வனப்பகுதியில் வசித்து வருபவர்களிடம் (OTFD) இருந்தும் என மொத்தமாக பெறப்பட்ட 34,302 மனுக்களில் 9029 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவின் காரணமாக தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளில் வசிக்கும் 9029 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்டோர் தாங்கள் வசிக்கும் வனப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக அரசு சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பழங்குடியின ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதியில் இருந்து பழங்குடிகளை வெளியேற்றினால் காட்டின் சமநிலையை குலைந்துவிடும் என்றும் தொடக்கம் முதலே வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் மோசமாகவே தமிழக அரசு செயல்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.இப்போதாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்படவேண்டும் என்கிறார். வன உரிமை, பழங்குடிகள் குறித்து நீண்டகாலம் ஆய்வு செய்துவரும் சி.ஆர். பிஜோய்.

மேலும் பழங்குடிகளை வனத்தில் இருந்து வெளியேற்றுவதால் வனத்திற்கே பேரிழப்பு உண்டாகும் என்கிறார் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன். இது தொடர்பாக அவர் நம்மிடம் பேசியபோது "இழக்கக்கூடிய வாழ்விடத்தில் எந்த உயிரையும் இயற்கை உருவாக்கவில்லை. தனது வாழ்விடத்தை ஓர் உயிர் இழப்பது இயற்கையுடனான ஆணிவேரை அறுத்துக்கொள்வதத்கு நிகராகும்.

அந்த வகையில் காட்டில் மனிதர்களுக்கான வாழ்விடமே இருக்கக் கூடாது என்பது கார்ப்பரேட்களுக்க்கு அரசு செய்யும் சேவையாகவே இருக்கும்.காட்டில் எல்லா உயிர்களும் இருப்பதுபோல் மனிதர்களும் இருக்கலாம் என்பதே இயற்கையின் படைப்பு. அவர்களை வெளியேற்றச் சொல்வது இயற்கையின் நியதிகளை மீறுவதற்குச் சமம்.

ஆகவே பழங்குடிகளை வெளியேறச் சொல்லும் உரிமை இங்கு யாருக்கும் இருக்கக்கூடாது. காடுகளில் வசிக்கும் மனிதர்களால் காட்டிற்கு ஒரு காலமும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. வெளியேயிருந்து காட்டிற்குள் செல்லும் மனிதர்களாலே காட்டிற்கு பாதிப்பு ஏற்படுகிறது" எனக் கூறினார்.

இந்த நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தினால் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 3,57,000 பேரும், கர்நாடகாவில் 1,76,000 பேரும், ஒடிஷாவில் 1,50,000 பழங்குடிகளும் வனத்தில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Also Watch: முறையற்ற காதல்… 21 வயது இளைஞர், 40 வயது பெண் தற்கொலை…!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: