முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ராஜராஜசோழன் சிலைக்கு சொந்தம் கொண்டாடும் குஜராத் அறக்கட்டளை!

ராஜராஜசோழன் சிலைக்கு சொந்தம் கொண்டாடும் குஜராத் அறக்கட்டளை!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • Last Updated :

ராஜராஜசோழன் மற்றும் ராணி லோகமாதேவி ஆகியோரின் சிலைகளை ஒப்படைக்கக்கோரி, சாரா பாய் அறக்கட்டளை சார்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மீண்டும் 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்த ராஜராஜசோழன் மற்றும் ராணி லோகமாதேவி ஆகியோரின் சிலைகள் 1960-ம் ஆண்டு காணாமல் போயின. 56 செ.மீ மற்றும் 46 செ.மீ உயரம் கொண்ட இந்தச் சிலைகள் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் என்னும் அறக்கட்டளை சட்டவிரோதமாக வைத்திருப்பதாக, தமிழக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குஜராத் சென்று அங்கிருந்த சிலைகளை மீட்டு வந்தனர்.

இந்நிலையில் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி பவுண்டேஷன் பிரதிநிதியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை எனப்படும் விக்ரம் சாராபாயின், 94 வயது சகோதரியுமான கிரா சாராபாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் 1942-ம் ஆண்டு முதல் தங்களிடம் இருக்கும், இரு சிலைகளையும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எடுத்துச் சென்று விட்டதாகவும் கிரா சாராபாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன சிலைகளின் உயரமும், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் உயரமும் வெவ்வேறானவை என்றும், இந்த சிலைகள் 1960-ல் காணாமல் போன சிலைகள் தான் என்பதை நிரூபித்து விட்டால் அவற்றை வழங்கி விட தயாராக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் இதுகுறித்து மேலும் பல ஆவணங்கள் தேவைப்படுவதால் பதில் அளிக்க கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை ஆறு வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Case postponed, Chennai High court, Idols theft, Rajarajacholan, Statues theft