THE HC HAS REFUSED TO ORDER THE RE USE OF THE BALLOT SYSTEM IN ELECTIONS VIN
அடுத்த தேர்தல்களில் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது - நீதிமன்றம் மறுப்பு!
கோப்புப் படம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல்களில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் முன்பு இருந்தது போல் மீண்டும் வாக்கு சீட்டு முறையை கொண்டுவருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான நடைமுறைகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2001 ஆம் ஆண்டு முதல் இதே கோரிக்கையிடன் தொடரப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் விசாரித்து தகுந்த உத்தரவுகள் பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் வாக்கு சீட்டு முறை கொண்டு வர வாய்ப்பில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உத்தரவுகள் பிறப்பித்துள்ளதால, இந்த வழக்கில் மீண்டும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.