630 மினி கிளினிக்குகள் 15-ம் தேதி திறப்பு- சுவர்கள் பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை!

630 மினி கிளினிக்குகள் 15-ம் தேதி திறப்பு- சுவர்கள் பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கை!

தமிழக அரசு தலைமைச் செயலகம்

சிகிச்சை மையத்தில் இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு உடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உடையானது, சுகாதாரத்துறையின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் முதல் கட்டமாக 630 கிளினிக்குகள் திறக்கபடும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 2000 கிளினிக்குகளில் 1400 கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 சென்னை மாநகராட்சியிலும், 200 நகர்ப்புறங்களில் 200 நகரும் மினி கிளினிக்குகளாகவும் அமையவுள்ளன.

மினி கிளினிக்குகளில் அடிப்படை மருத்துவ சேவைகள் கிடைக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எம் பி பி எஸ் படித்த மருத்துவர் மினி கிளினிக்கில் இருப்பார். சளி, காய்ச்சல், உடல் வலி என வருபவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதந்திர மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பார். ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இல்லாத இடத்தில் அமைக்கப்படும். நகர்ப்புறத்தில் 50,000 மக்கள் தொகைக்கு ஒரு மினி கிளினிக் திறக்கப்படும்.

மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பார். பள்ளி சுகாதாரப் பணியில் இருக்கும் மருத்துவர், புற நோயாளிகள் குறைவாக உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவர்கள் மினி கிளினிக்குகளில் நியமிக்கப்படுவார்கள். நகர்ப்புறங்களில் புதிய மருத்துவர் இடங்கள் உருவாக்கப்படும்.

ஏற்கெனவே உள்ள இணை சுகாதார மையங்கள் மினி கிளினிக்குகளாக மாற்றப்படும். இந்த கிளினிக்குளை காலை 9 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... சிந்து சமவெளி நாகரிக மக்கள் பன்றி, மாட்டு இறைச்சிகளை அதிக அளவில் உணவாக உட்கொண்டுள்ளனர் - தொல்லியல் ஆய்வில் தகவல்!பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் மினி கிளினிக்குகளின் வெளிப்புறச்சுவர் பச்சை வண்ணத்தில் இருக்க வேண்டும், 5 *3 அடி பெயர் பலகை இருக்க வேண்டும், காத்திருப்புக்கான இருக்கைகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்க், ஆயுஷ் மருந்துகள் ,தொற்றா நோய்களுக்கான மருந்துகள், டெடானஸ்க்கான ஊசி ஆகியவை இருக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்கான மருந்து இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக இந்த மையங்களுக்கு மருந்து அனுப்பப்படும். மினி கிளினிக்குகளில் மருந்தாளுனர் இல்லை என்பதால் ஆரம்ப சுகாதார நிலைநிலையங்களில் உள்ள மருந்தாளுனர் இணை சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்து இருப்பு, காலாவதியாகும் தேதி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை ஹீமோகுளோபின், சிறுநீர் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை போன்ற பரிசோதனை வசதிகள் இருக்க வேண்டும்.

இந்த மையத்தில் இசிஜி கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பநிலை கண்டறியும் தெர்மாமீட்டர், ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, பேட்டரி மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டும்.

சிகிச்சை மையத்தில் இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு உடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உடையானது, சுகாதாரத்துறையின் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மினி கிளினிக் டிசம்பர் 13ம் தேதிக்கு முன்னதாக நிறைவடைந்து, அதன் படங்கள் அடங்கிய விவரங்களை இயக்குனரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: