குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணத்தைக் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டையின் நகலை பெறவோ கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் ஆதார் எண் இணைத்திருந்தாலே போதும் என்றும் விளக்கமளித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களில், 14 லட்சத்து 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்றும், புதிய வங்கிக் கணக்கு தொடங்கி, ஆதார் எண் தொடர்புடைய தகவல்களை அனுப்புமாறும் கூட்டுறவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களில் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிய வங்கிக் கணக்கை தொடங்க தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உணவுத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், வங்கிக் கணக்கு இல்லாத நபர்கள் புதிய வங்கி கணக்கு தொடங்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை நியாய விலைக் கடையில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வங்கிக் கணக்கு உள்ளது என்றால், அந்த வங்கிக்கு சென்று அவர்களது ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லையென்றால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அதை ஆதார் எண்ணுடன் இணைத்து, அந்த விவரங்களை அவரவர் ரேஷன் கடைகளில் தெரிவிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதலாக ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டு கேட்கவோ, ஆதார் நகலை பெறவோ கூடாது என சார் நிலை அலுவலர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கிக் கணக்குகளை பெறுவது தொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்திற்கு மாற்றாக இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் உணவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.