தடைபடுமா திருச்சி தேர்தல்? சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை...!

இந்திய தேர்தல் ஆணையம்

பணப்பட்டுவாடா அதிகம் இருந்தால் தேர்தலை நிறுத்தவைக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஏற்கனவே தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரித்திருந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருச்சி மேற்கு தொகுதி பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மெண்ட் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை, அவர்கள் தகுதிக்கேற்ப கவர்களில் பணம் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் செய்த ஆய்வில் 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய நூறுக்கும் மேற்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன், திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முற்பட்டதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, திருச்சி மேற்கு தொகுதி பணப் பட்டுவாடா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், "தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. தில்லை நகர் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய கவர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன், மற்றும் துணை ஆணையர் தமிழ்மாறன் மீதும் கடும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்திய பிரதேசத்தில் பணப்பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது போல இந்த விவகாரத்திலும் விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருமங்கலம்  ஃபார்முலாவில் தொடங்கி  அதன் பின்னர் ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிவைப்பு,  அரவக்குறிச்சி, தஞ்சாவூர், வேலூர் தேர்தல்கள் என அடுத்தடுத்து நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பணப்பட்டுவாடா அதிகரித்ததால் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது.

Also read... ஜெயலலிதா, கருணாநிதி, கமல்தான் பறப்பார்களா..? ஹெலிகாப்டரில் பறந்துவந்த தக தக தங்கமகன் ஹரிநாடார்!

வழக்கத்திற்கு அதிகமாக சுமார் 118 தொகுதிகளில் இந்த முறை செலவின முறைகேடுகள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக, அதைக் கண்காணிக்க கூடுதல் செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது.

பணப்பட்டுவாடா அதிகம் இருந்தால் தேர்தலை நிறுத்தவைக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஏற்கனவே தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரித்திருந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: