தள்ளாத வயதிலும் வாக்களிக்க நேரில் வந்த 91வயது மூதாட்டிக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்த மாவட்ட ஆட்சியர்...

கரூரில் 91 வயதில் வாக்களிக்க வந்த பாட்டி

தள்ளாத வயதிலும் வாக்களிக்க நேரில் வந்த 91வயது மூதாட்டிக்கு மாவட்ட ஆட்சியர் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 • Share this:
  கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு எக்குவடாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சிருமான பிரசாந்த் மு வடநேரே, வாக்குப்பதிவு குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  இதில் எக்விடாஸ் மேல்லைப்பள்ளியில் 12 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. மாதிரி வாக்குச்சாவடி மையங்களும் இதில் உள்ளன. இந்த மையங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இனாம் கரூர் எஸ்.பி.காலணியைச் சேர்ந்த ஞானாம்பாள் 91 வயது மூதாட்டியை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தார்கள்.

  அப்போது அவரைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் மூதாட்டியின் அருகில் சென்று வயது முதிர்விலும் வாக்களிக்க ஆர்வமுடன் வருகை தந்து இருக்கின்றீர்களே உங்களுக்கு என்ன வயது ஆகிறது என்று கேட்டார்.

  அதற்கு பதிலளித்த அந்த மூதாட்டி, "எனக்கு 91 வயது ஆகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் நேரில் வந்து வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். எப்போதும் நடந்து வந்து வாக்களிப்பேன். இந்த முறை வயது முதிர்வின் காரணமாக நடக்க இயலாததால் சக்கர நாற்காலியில் என்னை அழைத்து வந்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்.

  அப்போது அவரை அழைத்து வந்தவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நேரில் வந்து வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ள மூதாட்டி இந்த ஆண்டு எப்படியும் நேரில் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தங்களை வற்புறுத்தி அழைத்து வந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

  இதனைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் “அனைத்து வாக்காளர்களுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணமாக திகழ்கின்றீர்கள். இந்தத் தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்ற ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க நேரில் வருகை தந்தமைக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்து பாராட்டினார்”. இந்த நிகழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

  மேலும் படிக்க... சுடுகாடு இல்லை... திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணித்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: