கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை: முதலமைச்சர் உத்தரவு

கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை: முதலமைச்சர் உத்தரவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: October 6, 2018, 10:00 AM IST
  • Share this:
தமிழகத்தில் நாளை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலுக்கு சென்ற அனைத்து மீனவர்களும் கரைக்குத் திரும்புவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரண்டு நாட்களில் வலுப்பெற்று புயலாக மாறி ஓமனில் கரையை கடக்கும் என்றார்.

தெற்கு வங்கக் கடலில் வரும் 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அதன் பிறகு, வட கிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிக்கையில், தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும், அரபிக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, கடலுக்கு சென்றுள்ள அனைத்து மீனவர்களும் கரைக்கு திரும்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கனமழை பெய்யும் போது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு அரசுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.மழை தொடர்பாக, மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை கண்காணிக்க வேண்டும் எனவும் பெண்ணை ஆறு, பாலாறு, கொசஸ்தலை ஆறு உள்ளிட்ட நதிகளின் மீது கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுரை வழங்கியுள்ளது.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ``தமிழகத்தில் ஏதோ ஒரு இடத்தில் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக பெய்யலாம் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மக்கள் அதை பற்றி அச்சப்பட வேண்டாம்’’ என்று கூறினார்.
First published: October 6, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading