ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்க மத்திய அரசு அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தினமும் 9.2 கோடி லிட்டர் நீர் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்க மத்திய அரசு அனுமதி
ஸ்ரீவைகுண்டம் அணை
  • News18
  • Last Updated: September 9, 2020, 5:26 PM IST
  • Share this:
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலமாக 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9கோடியே 20லட்சம் லிட்டர்(20மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தினை 2011ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாதலால் அணையின் உள்ளே குடிநீர் திட்டங்கள் எதையும் துவங்கவேண்டுமெனில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்பது விதிமுறையாகும்.

இந்த விதிமுறையின்படி தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை  07.03.2008ல் பிறப்பித்துள்ள உத்தரவில் அணைக்கட்டில் இருந்து குடிநீர்த் தேவைக்கான தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியிருந்தது.


இந்த அனுமதிக்கெதிராக குடிநீர் வடிகால் வாரியம் 1000 லிட்டர் நீர் 10 ரூபாய் விலை என்ற கணக்கில் நாள்தோறும் 9.20 கோடி லிட்டர் நீரை தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கி வந்தது.

இதுதொடர்பாக திமுக இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கியது தவறு என்றும் குடிநீர் பயன்பாட்டை தவிர வேறு பயன்பாட்டிற்கு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என்றும் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

Also read... செப்.21 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசுதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் கடந்த  2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான தீர்ப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பாசன தேவை பூர்த்தியான பின்னரும் இருக்கும் நீரை தொழிற்சாலைகளுக்கு வழங்கலாம் என்று கூறியிருந்தது.

அதன்படி தற்போது 3.18 கோடி லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க தூத்துக்குடியில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் 20 எம்.ஜி.டி திட்டத்தின்கீழ் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான வனத்துறையின் அனுமதி கோரி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அளித்துள்ள விண்ணப்பத்தை அண்மையில் வனத்துறை முதன்மை செயலாளர் பரிந்துரை செய்திருந்தார்.

அரசாணைக்கு எதிராக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கியதற்காகவும், அனுமதிக்கப்பட்ட 0.055 ஹெக்டேரைவிட கூடுதலாக 0.025 ஹெக்டேர் பகுதியை பயன்படுத்திய குற்றத்திற்காவும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து 1,97,000 ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்றுத் தரவேண்டும் என்று வனத்துறை முதன்மை செயலாளர் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் மண்டல அலுவலகத்திற்கு  பரிந்துரை செய்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய அரசு வனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததையும், இத்தகைய விதி மீறலை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தாத வனத்துறைக்கும்  கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மிகவும் குறைவு என்பதால் அதனை மறுஆய்வு செய்ய வேண்டும்.  அணைக்கட்டில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணையை தமிழக அரசு ரத்து செய்யலாம் என்றும் கூறி ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்காடி வரும் தி.மு.க.வின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் ஜோயல், ‘இத்தனை ஆண்டுகள் சட்டத்திற்கு புறம்பாக 21 தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்று நீரை வழங்கியதே பெரும் தவறு.

20 எம்.ஜி.டி திட்டத்தில் தினமும் எடுக்கப்பட்டுவந்த 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நபர் ஒருவருக்கு தினமும் 50 லிட்டர் வீதம் வழங்கலாம். இதன்படி நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 20 எம்.ஜி.டி திட்ட தண்ணீரை நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் சுமார் 200 லிட்டர் வரை தாராளமாக வழங்கமுடியும்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த வழக்கு விவகாரத்தில் எடுக்கவுள்ள முடிவை பொறுத்து மத்திய அரசின்  உத்தரவிற்கு எதிராக மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்" என்று தெரிவித்தார்.

இந்த அனுமதியால் ஸ்ரீவைகுண்டம அணையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் அணையின் வடகால் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரும், தென்கால் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் விவசாயம் நடைபெற்று வருவதாகவும் தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கினால் இந்த பகுதிகளில் விவசாயம் பாதிப்படையும் எனவும் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் இந்த  அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading