அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்...!

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் வேலுமணி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்...!

சென்னை உயர் நீதிமன்றம்

அறப்போர் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு குறித்து எதிர்மறை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறியதாக அறப்போர் இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதாகவும், அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என்றும் அரசியல் கட்சிகள் இந்த வழக்கு குறித்து பேச வாய்ப்பிருப்பதால், வழக்கு விசாரணையை தேர்தலுக்கு பின் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வழக்கு குறித்து பேச கூடாது என உத்தரவிட்டனர்.

Also read... அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதை தடை விதிக்க முடியாது - நீதிமன்றம்

இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கு குறித்து எதிர்மறை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை மீறி அறப்போர் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் இதே அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

மேலும், அறப்போர் இயக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: