கால்குலேட்டரையே விஞ்சும் வேகத்தில் கணித கேள்விகளுக்கு விடையளித்து அசத்துகிறார் ஒரு தமிழகத்து சிறுவன்.
எத்தனை இலக்க எண்களையும் அசால்டாக கூட்டி, கழித்து, பெருக்கி விடை சொல்லி அசத்தி வருகிறார் மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர். மனக் கணக்கில் நொடியில் விடை சொல்லும் அந்த சிறுவன் யார்?
கால்குலேட்டரையும் விஞ்சும் வேகத்தில் கணித கேள்விகளுக்கு விடையளிக்கிறான் சிறுவன் அருணகிரி. நாகையைச் சேர்ந்த முனியப்பன் - ஜோதி தம்பதியினரின் மகனான இவர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி செல்லத் தொடங்கியது முதலே அருணகிரிக்கு எண்கள் மீது தீராத காதல். இதனால் தானாகவே ஆர்வத்துடன் கணிதப் பாடத்தை பயில தொடங்கினார்.
கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்குகளை பெற்றோர் மற்றும் ஆசிரியர் உதவியுடன் கற்கத் தொடங்கிய இவர், இன்று எவ்வளவு பெரிய எண்களைப் பெருக்கச் சொன்னாலும் மனக் கணக்கிட்டு நொடியில் விடை சொல்லும் அளவிற்கு கணிதத்தில் கைதேர்ந்தவர் ஆகியுள்ளார்.
கணிதப் பாடம் தமக்கு எளிமையாக இருப்பதாகக் கூறும் அருணகிரி, வருங்காலத்தில் அத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டுள்ளார். தான் கூறும் விடைகள் சரியானதா என்பதை சோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் என்றும் சவால் விடுகிறார் இந்த சிறுவன்!
கணிதப் பாடம் என்றாலே சற்று அச்சப்படும் மாணவர்கள் இருக்கின்ற சூழலில், மூன்றாம் வகுப்பு மாணவன் மனக் கணக்கிட்டு கணித பாடத்தில் அசத்தி வருவது நாகையில் பல தரப்பினர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.