Home /News /tamil-nadu /

மருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...

மருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தாவின் வாழ்க்கை ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை என எளிமை நிறைந்தது...

டாக்டர் சாந்தா

டாக்டர் சாந்தா

மருத்துவ உலகின் தேவதை டாக்டர்.சாந்தா வின் வீட்டைப் பார்த்தபோது எளிமை நிறைந்ததாக இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சாந்தா, வளர்ந்து மருத்துவப் படிப்பை முடித்து, மகப்பேறு மருத்துவராக பணியாற்றி இருந்திருக்கிறார். பின்னர் புற்றுநோய் சிகிச்சை குறித்த முதுகலை படிப்பை முடித்துவிட்டு ஏழைகள் புற்றுநோயால் படும் துயரத்தைக் கண்டு அதற்கான சிகிச்சைக்காக தன் வாழ்நாளை தொடங்கியிருக்கிறார்.

1954 முதல் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு மேலாக #புற்றுநோய் சிகிச்சைக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் அளித்திருக்கிறார். 93 வயதில் நாட்டின் பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்று, உலக அளவில் கவனத்தைப் பெற்றிருக்கும் டாக்டர்.சாந்தா அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது, வீட்டில் பார்த்தக் காட்சி அவர் மீதான மதிப்பையும், மரியாதையையும் இன்னும் பல மடங்கு அதிகரிக்க வைத்தது.

அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என பலரிடம் பேசியபோது, கிடைத்த தகவல்கள் நெஞ்சை நெகிழ வைத்தன. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் அவர்களுக்கு சமைக்கப்படும் உணவைத் தான் டாக்டர் சாந்தாவும் சாப்பிட்டுள்ளார், அவருக்கென தனியாக உணவு சமைப்பது இல்லை என்கின்றனர் ஊழியர்கள்.நோயாளிகள், ஊழியர்கள், மருத்துவர்கள் என பாகுபாடில்லாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரி தான் அன்பாக கனிவாக அவர் நடந்து கொண்டார் என்கிறார்கள் செவிலியர்களும், மருத்துவர்களும்... அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடம் அடையார் மருத்துவமனையின் மொட்டை மாடியில் உள்ள அவரது வீடு தான். வீடு என்றால் மிகப் பெரிய பங்களாவாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. மிகச்சிறிய அளவில் ஒரே ஒரு ஹால், ஒரு படுக்கையறை, கழிவறை இருந்தது.


வீட்டில் அத்தியாவசியம் தவிர்த்து எந்தவிதமான ஆடம்பர பொருட்களும் இல்லாமல் மிக எளிமையாக காட்சியளித்தது. அண்ணாந்து பார்த்தால் மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறிகள் மூன்றும் கிட்டத்தட்ட இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியதாக இருக்கும் என்பதை அதில் ஒட்டியிருந்த அழுக்கும், பழுப்பேறி மங்கிப்போன வண்ணமும் நமக்கு உணர்த்தின. மொட்டை மாடியில் வெயில் காலத்தில் இருப்பது கடினமானது என்றாலும் இதுவரை வீட்டில் ஏசி மாட்டிக்கொள்ளவில்லை.

அவரது கட்டிலைப் பார்த்தால், அவரைப்போலவே மிகவும் வயதான தோற்றத்தில் காட்சியளித்தது. திருமணம் செய்து கொள்ளாமல் நோயாளிகளின் வாழ்வுக்காக மிகமிக எளிமையாக வாழ்ந்து தன் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டாக்டர் சாந்தா. அவரை இழந்து நிற்கும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அன்னையை இழந்த ஆதரவில்லாத பிள்ளைகளைப் போல் கண்ணீர் விடும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாய் இருக்கிறது.

லட்சக்கணக்கான மக்களுக்கு நோயிலிருந்து மறுவாழ்வு கொடுத்த அவர் மரணித்த இந்த நாளிலும், மருத்துவமனைப் பணிகள் தொய்வில்லாமல் நடக்கிறது. புற்றுநோயின் வலிகளைச் சுமந்து, வரிசையில் காத்திருக்கும் ஒவ்வொரு நோயாளியின் முகத்திலும் தெரிகிறார் சாந்தா அம்மா.

மொத்தத்தில் மருத்துவ உலகின் தேவதை மறைந்துவிட்டார்...தேவதைகள் எப்போதும் பிறப்பதில்லை; எப்போதாவது பிறப்பது அரிதினும் அரிது.மேலும் படிக்க... மருத்துவர் வி. சாந்தாவின் அரிய புகைப்படத் தொகுப்பு!உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Adayar, Cancer, Dr V Shanta

அடுத்த செய்தி