Home /News /tamil-nadu /

எங்களையே எதிர்த்து பேசுறியா... தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை தாக்கிய சாதிவெறி கும்பல்!

எங்களையே எதிர்த்து பேசுறியா... தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை தாக்கிய சாதிவெறி கும்பல்!

இளைஞர் மீது தாக்குதல்

இளைஞர் மீது தாக்குதல்

நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞனா என கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தங்களை எதிர்த்து பேசுகிறாயா, எங்கள் ஊருக்கு வரக்கூடாது என அவரது ஆடைகளை கலைந்து , சாலையில் கையை பின்னால் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரை நிர்வாணமாக்கி, நடுரோட்டில் தாக்கிய சாதிவெறி கும்பல், காலில் விழுந்து கெஞ்சிய இளைஞரின் தந்தையையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே கருப்பூர் வீராணர் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்காக கடந்த ஆண்டு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சதீஷ்குமாருக்கு, அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக ஏஜென்ட் ஒருவரை சந்திப்பதற்காக, ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்திற்கு தனது காரில் சென்றுள்ளார்.

அப்போது, கடை தெருவில் உள்ள டீக்கடையில் நிற்குமாறும், தான் அங்கு வருவதாகவும் ஏஜென்ட் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தனது உறவினரை பார்த்த சதீஷ்குமார், அவரையும் அழைத்து தொண்டரம்பட்டு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அவரது கார் சாலையின் குறுக்கே இருப்பதால், அதனை ஓரமாக நிறுத்துவதற்காக காரை எடுத்தபோது, அவரது உறவினரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனம் கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கு இருந்த சில இளைஞர்கள் ஏன் இரு சக்கர வாகனம் மீது காரை மோதினாய் என கேட்டு உள்ளனர். அதற்கு சதீஷ்குமார் இது தனது அண்ணன் இருசக்கர வாகனம் தான் என கூறியுள்ளார். அப்போது போதையில் இருந்த இளைஞர்கள், நீ எந்த ஊர், எந்த தெரு என கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது தனது ஊரையும், தெருவையும் சதீஷ்குமார் கூறியுள்ளார்.

Read: ரூ.2 லட்சத்திற்கு பெற்ற குழந்தையை தாய் விற்ற சம்பவத்தில் திடீர் திருப்பம்


அப்போது நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞனா என கேட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் தங்களை எதிர்த்து பேசுகிறாயா? எங்கள் ஊருக்கு வரக்கூடாது என அவரது ஆடைகளை கலைந்து சாலையில் கையை பின்னால் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதனை பார்த்த அவரது உறவினர் இதனை தட்டி கேட்ட போது அவரையும் தாக்கி உள்ளனர்.

இதில் அவரது செவித் திறன் தற்போது கேட்கவில்லை என கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த சதீஷ்குமாரின் தந்தை தனபால், அடித்த இளைஞர்களின் காலில் விழுந்து தனது மகனை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார்.  அப்போதும் சாதிவெறிக் கும்பல் சதீஷ்குமாரின் தந்தையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் பட்டுக்கோட்டை  மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தபோது காவல்துறையினர் புகாரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஒரத்தநாடு டிஎஸ்பியிடம் புகார் அளிக்கவே, நான்கு நாட்களுக்கு பிறகு பாப்பாநாடு காவல்துறையினர் தற்போது கதிரவன், முருகானந்தம், ரஞ்சன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also read: விவசாயத்துக்கு ரூ.123 லட்சம் கோடியா? மொத்த பட்ஜெட்டே ரூ.34 லட்சம் கோடிதான்... சு.வெங்கடேசன் எம்.பி ட்விட்


இதுகுறித்து சதீஷ்குமார் கூறுகையில், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் என்னை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. அந்த ஊரில் தனக்கு யாரையும் தெரியாது என்றும், அவர்கள் வீணாக வந்து தன்னை அடித்து நிர்வாணப்படுத்தியுள்ளனர் என்றும் கூறினார்.
Published by:Murugesh M
First published:

Tags: Caste, Dalit

அடுத்த செய்தி