கொரோனா கொடூரம்.. உயிரிழந்த கணவரின் உடல் எங்கே? கண்ணீர் சிந்தும் மனைவி

உயிரிழந்த பாலகிருஷ்ணன்

தஞ்சை மருத்துவக் கல்லூரியில், கொரோனவால் உயிரிழந்தவரின் உடலை கடந்த நான்கு நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணீருடன் தேடி வருகின்றனர்.

  • Share this:
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பாலகிருஷ்ணன் . ஆசாரியான இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், லோகேஷ், ஹரிப்பிரியா என்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமான நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, அவரது குடும்பத்தினர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடுமையாக நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், மறுநாளே உயிரிழந்தார். இந்நிலையில் உடலை பக்குவப்படுத்தி அவரது உறவினர்களிடம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு உடலை எடுத்து சென்று அங்கு அடக்கம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் உறவினர்கள் மேற்கொண்டனர்,

    அப்போது உறவினர்கள், இறந்த பாலகிருஷ்ணனின் உடலை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என கூறியதால் அவர் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றியுள்ளனர். அதில் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலுக்குப் பதிலாக 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக உடலை எடுத்துக் கொண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனர்.

    அங்கு மருத்துவ கல்லூரி நிர்வாகத்திடம் மாற்றி கொடுத்த உடலை ஒப்படைத்துவிட்டு இறந்த பாலகிருஷ்ணனின் உடலை கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் தவறு நடந்து விட்டதாகவும், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    பாலகிருஷ்ணனின் உடலை மீட்டுத் தருவதாக உறுதி அளித்து குடும்பத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பாலகிருஷ்ணன் இறந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை மருத்துவமனை நிர்வாகத்திடம் எந்த தகவலும் வரவில்லை என உயிரிழந்தவரின் மனைவி சங்கீதா தெரிவிதுள்ளார்.

    மேலும் படிக்க...  தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறேன்: சீமான்

    கொரோனா சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்த தனது கணவரின் உடலை தொலைத்துவிட்டு நிர்க்கதியாக நிற்பதாக வேதனையுடன் தெரிவிக்கிறார் சங்கீதா. தன் கணவனின் உடலை கொடுங்கள் இல்லை அவரின் உடலை எரித்த சாம்பலையாவது கொடுங்கள் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    இது ஒரு புறம் இருக்க 60 வயது மதிக்கத் தக்க அந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் யாருடையது என்பது இதுவரை தெரியவில்லை. அவரது உடலைத் தேடி அவரது குடும்பத்தினர் எங்கு அலைந்து கொண்டிருக்கிறார்களோ என்பது யாருக்கும் தெரியாத சோகம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: