முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘மாமா’ என்ற அபயக்குரல்.. 10 ஆண்டு பகை மறந்து ஓடோடி வந்து உயிரிழந்த உறவு - தஞ்சை களிமேட்டில் துயரம்!

‘மாமா’ என்ற அபயக்குரல்.. 10 ஆண்டு பகை மறந்து ஓடோடி வந்து உயிரிழந்த உறவு - தஞ்சை களிமேட்டில் துயரம்!

ஓடோடி வந்து உயிரிழந்த உறவு

ஓடோடி வந்து உயிரிழந்த உறவு

Thanjavur Kalimedu Accident : தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் திருவிழா சப்பரம் உயர்அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்தபோது, உறவுக்கார சிறுவன் “மாமா..” என்று அபயக்குரல் எழுப்பியதைக் கேட்டு 10ஆண்டு பகை மறந்து சிறுவனை காப்பாற்ற ஓடோடி வந்த உறவினரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, சப்பர உலா நடைபெற்ற நிலையில். அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதில் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், 11 பேர் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தின்போது, ஓரடி அகல இடத்திற்காக, பத்தாண்டுகள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த நிலையில், உறவுக்கார சிறுவன், ‘மாமா’ என்று அழைத்த ஒரு வார்த்தைக்காக முதியவர் ஒருவர் ஓடிவந்து உயிரை விட்ட சம்பவம், அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாநகரம் அருகே களிமேடு கீழத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (42). விவசாயியான இவருக்கு திருமணமாகி, ராஜ்குமார் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது சொந்த தாய் மாமன், பக்கத்து வீட்டில் வசிக்கும் சாமிநாதன் (56). விவசாயியான இவரும், முருகேசனும் பக்கத்து, பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர்.

சாமிநாதன் வீடு கட்டிய போது, இவர்கள் இடையே ஓரடி அகல இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரண்டு குடும்பங்களுக்கு இடையே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான சண்டை, சச்சரவு நடந்து வந்துள்ளது. சிலமுறை அடிதடி சண்டை வரை சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பர் திருவிழாவையொட்டி தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது. தேரை தள்ளிக் கொண்டு சென்ற முருகேசனின் மகன் ராஜ்குமார், மின் விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது, சாமிநாதன் தேர் திரும்புகின்ற இடத்திற்கு, 100 அடி தாண்டி உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார்.

தனது தந்தை முருகேசன் அழைப்பது போல, அவரது மகன் ராஜ்குமார், சாமிநாதனை பார்த்து “மாமா..” என்று அபயக்குரல் எழுப்பி இருக்கிறார். அதைக் கண்டு அதிர்ந்துபோன சாமிநாதன், ராஜ்குமாரை காப்பாற்றச் சென்ற போது, தரை ஈரத்தில் பாய்ந்த மின்சாரம் அவரின் உடலிலும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சாமிநாதன் உயிரிழந்தார்.

Must Read : தஞ்சை தேர் விபத்து காரணங்களை கண்டறிய ஒரு நபர் குழு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

அவர் காப்பாற்றச் சென்ற சிறுவன் ராஜ்குமாரும் பரிதாபமாக இறந்துவிட்டார். ஓரடி அகல இடத்திற்காக பல ஆண்டுகள் பகையில் இருந்த குடும்பம், உறவென்று சொல்லி அழைத்த காரணத்தினால் ஓடோடிவந்து உயிரை இழந்த சாமிநாதன் கதையை சொல்லி, அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்கின்றனர்.

First published:

Tags: Car Festival, Thanjavur