தஞ்சை மாவட்டம் களிமேடு கீழத்தெருவை சேர்ந்தவர் இனியன், தஞ்சை மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை போலவே, களிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் ஓராண்டு படிப்பை, பணம் கட்ட முடியாமல் பாதியில் விட்ட செல்வக்குமார், தற்போது லாரி டிரைவராக பணிபுரிகிறார்.
களிமேட்டில் அப்பர் தேர்த் திருவிழாவில், அதிகாலையில் நடந்த அசம்பாவித சம்பவத்தை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, இனியனும், செல்வக்குமாரும் அங்கிருந்தவர்களை காப்பாற்ற துணிச்சலாக களமிறங்கியுள்ளனர். இவர்களில் இனியன், 'லைப் கார்டு' என்ற முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர். எனவே, தரையில் மின்சாரம் பாய்வதை உணர்ந்து கொண்டு, செல்வக்குமாரிடம் 'அலக்கு' (அலக்கு என்றால் நீண்ட மூங்கில் குச்சியின் நுனியில் அரிவாள் கட்டப்பட்டிருக்கும். பெரிய மரங்களில் இருந்து முருங்கை காய், முருங்கை கீரை போன்றவற்றை பறிக்க கிராமங்களில் பயன்படுத்துவர்) கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்.
'அலக்கை' வாங்கிய இனியன், முதலில் உயர் மின்னழுத்த மின்கம்பியுடன் ஒட்டியிருந்த தேரின் பகுதியை அகற்றியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து, மின்சாரம் தாக்கியதால் தரையில் விழுந்து, எழ முடியாமல் கிடந்தவர்களை மீட்டுள்ளனர். அவர்களில், களிமேட்டை சேர்ந்த கலியமூர்த்தி, மூர்த்தியின் மகன் ஹரீஷ் ராம், சந்தோஷ், கெளசிக், நரிமேட்டை சேர்ந்த பரணிதரன் ஆகியோர் மூர்ச்சையான நிலையில் இருந்துள்ளனர். தனது, 'லைப் கார்டு' அனுபவத்தை பயன்படுத்திய இனியன், தான் சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், இதேபோல செல்வக்குமாரையும் செய்ய சொல்லி இருக்கிறார்.
இவர்கள் இணைந்து சிபிஆர் சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிய கலியமூர்த்தி, ஹரீஷ் ராம் ஆகியோர் பிழைத்துக் கொண்டனர். கெளசிக், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெறுகிறார். சிறுவர்கள் சந்தோஷ், பரணிதரன் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். "தங்களால் பிழைத்தவர்கள் குறித்து மகிழ்ச்சி அடைவதை விட, காப்பாற்ற முடியாமல் போனவர்கள் குறித்தே அதிக வருத்தப்படுகிறோம்" என்கின்றனர் இனியனும் செல்வக்குமாரும்.
Also Read : நள்ளிரவு வரை படித்துவிட்டு தூங்க சென்ற சிறுவன்.. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சோகம்..
இருவரும் சமயோசிதமாக செயல்பட்டு மின்கம்பியின் தொடர்பை அகற்றியது பல பேரது உயிரை காப்பாற்றியுள்ளது. மேலும், மின்சாரம் தாக்கி இதயத்துடிப்பு நின்றவர்களுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியது பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ளது. ஐடிஐ முடித்து, கடந்த, 15 ஆண்டுகளாக மின் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் இனியனுக்கு, அவரை நிரந்தர பணியாளர் ஆக்க வேண்டும் என்பது கோரிக்கை. பணம் இல்லாததால் இன்ஜினியரிங் படிப்பை கைவிட்ட செல்வக்குமாருக்கு அரசு வேலை வேண்டும்' என்பது கோரிக்கை.அதுவே களிமேடு கிராம மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது..
சிபிஆர் என்றால் என்ன?
*'CPR-Cardio Pulmonary Resusicitation'* எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். விபத்துகள், மின்சார தாக்குதலில் சிக்கியவர்கள் நினைவிழந்து, ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால், வாயில் வாயை வைத்து ஊதுவதும், பின்னர் அவர்களது மார்பை, 30 தடவை அழுத்தி மூச்சு விடச் செய்வதற்கான முதலுதவி சிகிச்சை.
முதலில் அவர்களது சுவாசப்பாதையான மூக்கு, வாயில் ஏதும் தடையில்லாமல் சீராக இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். நினைவிழந்த நபரை, சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி, அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து, தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் அவரது நாக்கு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.
இரண்டாவதாக, சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு, வாயினை அவரது வாயின் மீது வைத்து (Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊதி உள்செலுத்த வேண்டும்.
ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழப்பதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை (Carotid Pulse) நோக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நாடித்துடிப்பு இல்லையெனில், நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கலாம். விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து, 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை), ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது. இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் தொடர வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் சுவாசிக்க துவங்கினாலோ அல்லது இருதயத் துடிப்பு தெரிந்தாலோ, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இதற்கு பெயர் தான் சிபிஆர் முதலுதவி சிகிச்சை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, Tanjore