கணவர் இறந்ததை சொல்லாமல் மறைத்து விட்டனர்.. கைக்குழந்தையுடன் இளம் பெண் தர்ணா!

குழந்தையுடன் மனைவி தர்ணா

கணவர் கொரோனாவால் இறந்த தகவலை மனைவியிடம் கூறாமல் மறைத்ததால் கணவர் வீட்டு முன் குழந்தையுடன் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.

  • Last Updated :
  • Share this:
கணவர் உயிரிழந்த தகவலை கூட மனைவியிடம் சொல்லாமல் மறைத்த நிலையில், பத்து மாத கைக்குழந்தையுடன் கணவர் வீட்டு முன்பு மனைவி  உறவினர்களுடன்  தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாலாஜி நகர் விரிவாக்கம் பகுதியில் வசித்த மணியன் மகன் சரவணன் (38). இவருக்கும் திருவிடைமருதூரை அடுத்துள்ள பாலூரைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சியாமளாதேவி (24) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கர்ப்பமடைந்த சியாமளா தேவி பிரசவத்திற்காக சென்னையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 10 மாதம் முன்பு குழந்தை பிறந்த நிலையில் குழந்தையுடன் அவரது தாயார் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மே மாதம்  பாலாஜி நகர் விரிவாக்கப் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த சரவணனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சரவணன் இறந்த தகவலை சரவணன் பெற்றோர்கள் சியாமளா தேவிக்கு தெரிவிக்காமலேயே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சரவணன் இறந்த தகவல் கடந்த மாதம் சியாமளா தேவிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சியாமளாதேவி அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் கும்பகோணம் வந்து சரவணன் இறந்த செய்தியை ஏன் தெரிவிக்கவில்லை என சரவணனின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு சரவணனின் பெற்றோர் உரிய பதில் தராததால் இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சியாமளா தேவி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read:    சட்டமன்றத்தில் பிரிட்டிஷார் காலத்திய ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு..

இந்த நிலையில்  சியாமளாதேவி, அவரது தாய் மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர்  சரவணன் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோர்களிடம் சரவணனுக்கு முதல் திருமணம் நடந்து விவாகரத்து ஆனதை மறைத்து இரண்டாவதாக சியாமளா தேவியை திருமணம் செய்து வைத்ததாக கூறி, சரவணன் இறந்த தகவலை தெரிவிக்காமல் மறைத்ததை கண்டித்தும், சரவணனை இழந்து தவிக்கும் சியாமளா தேவி மற்றும் அவரது குழந்தை ஆகியோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சரவணன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து  அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கணவன் உயிரிழந்து பல மாதங்கள் கடந்த நிலையில் பத்து மாத கைக்குழந்தையுடன் தாய் கணவர் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

எஸ்.குருநாதன்- செய்தியாளர், தஞ்சாவூர் 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: