சில மணி நேரங்களிலேயே தடுப்பூசி டோக்கன் விநியோகம் நிறைவு: வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்

பொதுமக்கள் ஏமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு குறைந்த அளவிலான தடுப்பூசிகளே வந்துள்ளதால் தடுப்பூசி மையங்களில் குறைந்த அளவிலேயே டோக்கன் வினியோகிக்கப்பட்டது. அவையும் விரைவில் தீர்ந்துவிட்டதால் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

  • Share this:
 தஞ்சாவூரில் நான்கு மணி நேரத்தில்  தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன் முடிந்துவிட்டாதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு கீழே பதிவாகி வருகிறது. அதேவேளையில், தமிழகத்தில் நாளோன்றுக்கு சராசரியாக 450 க்கு மேல் கொரோனா பலி எண்ணிக்கை பதிவாகி வருகிறது. தஞ்சையில் 10க்கு மேல் கொரோனா தினசரி பலி எண்ணிக்கை பதிவாகிறது.  இதையடுத்து மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில்  117 மையங்களில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழகத்துக்கு 4.95 லட்சம் தடுப்பூசி அனுப்பப்பட்டது. இவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. இந்நிலையில்  தஞ்சாவூர்  மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடப்படும் என தகவல் வெளியானதையடுத்து,  காலை முதல் டோக்கன் வாங்க குவிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சாவூர் அண்ணா நூற்றாண்டுஅரங்கில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் காலை முதல் காத்திருந்து டோக்கன் பெற்று சென்றனர். மாவட்டத்திற்கு  12,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே  வந்திருப்பதால் அனைத்து மையங்களிலும் குறைந்தளவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அவற்றை பெற பொதுமக்கள் அதிகளவு கூடினர்.

மேலும் படிக்க.. கொரோனாவால் குடும்பத்தில் 3 பேர் பலி: பெண் வேதனை!

அண்ணா அரங்கில் ஒதுக்கப்பட்ட 300 டோக்கன் தீர்ந்துவிட்டதால், தடுப்பூசி போடும் பணி 4 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. மேலும் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், தடுப்பூசி வந்த பிறகே டோக்கன் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு டோக்கன் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 117 மையங்களிலும் டோக்கன் விரைவில் தீர்ந்துவிட்டதால் டோக்கன் கையிருப்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.

செய்தியாளர்: குருநாதன்


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: