முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சூரியனார் கோவில் ஆதீனம் 102 வயதில் பரிபூரணம் அடைந்தார்

சூரியனார் கோவில் ஆதீனம் 102 வயதில் பரிபூரணம் அடைந்தார்

 ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்

ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்

ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு  தமது அருள் ஆட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மடத்தில் மேற்கொண்டார்

  • Last Updated :

தஞ்சை மாவட்டத்தில் உள்ள  சூரியனார்கோயிலின்  27-வது குருமகாசன்னிதானம்  ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்இன்று பரிபூரணம் அடைந்தார்.  அவருக்கு வயது 102.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, பழம்பெருமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27வது சந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இன்று காலை 11 மணியளவில் பரிபூரணம் அடைந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடரங்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு, திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில், மூத்த தம்பிரான் சுவாமிகளில் ஒருவராக இருந்து மெய்கண்டாரின் முக்தித் தலமான திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், சிவஞான முனிவர் உறைந்த தலமாகிய காஞ்சிபுரம் கிளை மடத்திலும் சிறப்பாக சேவைபுரிந்தார்.

அதன்பின், திருவாவடுதுறை 23-வது சந்நிதானமாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசார்யா சுவாமிகளிடம் மந்திர கஷாயம் பெற்று சூரியனார்கோயில் மடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  அங்கே, 26-வது ஆதீனகர்த்தர் தெய்வசிகாமணி தேசிக குருமூர்த்தி சுவாமிகள் சிவப்பேறு அடைந்ததையொட்டி 27-வது  பட்டம் பெற்று, முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதீனகர்த்தராக அருளாட்சி செய்து வந்தார்.

இதையும் படிங்க: பூஜை அறையில் இந்த பொருட்களை வைத்தால் அடகு வைத்த நகைகளை மீட்கலாம்...

சைவ சமய வளர்ச்சியிலும் ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு  தமது அருள் ஆட்சி காலத்தில் பல்வேறு பணிகளை மடத்தில் மேற்கொண்டார் .பழைமையான கோவில்களை புதுப்பித்து திருப்பணி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தார். 102 வயது முதிர்வு காரணமாக இன்று காலை 11 மணி அளவில் சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார். அவரது திருஉடல் சூரியனார்கோயில் ஆதீன மடத்தில் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் அம்பலவாணர் தம்பிரான் சுவாமிகள்

இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீன மடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இன்று மாலை 5 மணிக்கு சூரியனார் கோயில் 27-வது குருமகாசன்னிதானம் திருஉடல் குருமூர்த்தத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும், பத்து நாட்கள் குருபூஜை நிறைவடைந்தவுடன் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோயிலில் உள்ள ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் சூரியனார் கோயிலின் 28-வது குருமகா சன்னிதானமாக ஞானபீடம் ஏற்பார் என்றும், அவர் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்று வழங்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காக பணியாற்றுகிறார்: தாமோ அன்பரசன்

First published:

Tags: Thanjavur