பட்டுக்கோட்டையில் சுயேச்சையாக போட்டியிட்டு 3வது இடத்தை பெற்றவர் கொரோனாவால் உயிரிழப்பு!

சுயேட்சையாக போட்டியிட்ட பாலகிருஷ்ணன்

தேர்தலில் தோல்வியை தழுவினாலும் திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

 • Share this:
  பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட வி.பாலகிருஷ்ணன் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வி.பாலகிருஷ்ணன் (60). இவர் தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் ஆணையம் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கியிருந்தது.

  பெரும் கட்சிகளுக்கு எதிராக துணிச்சலுடன் போட்டியிட்ட பாலகிருஷ்ணன், தேர்தலில் தோல்வியை தழுவினாலும் திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக 23,771 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அதேதொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பெரும் கட்சி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

  இதனிடையே, பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சனிக்கிழமை கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். உயிரிழந்த பாலகிருஷ்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

  செய்தியாளர் - எஸ்.குருநாதன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: