• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழை நீரில் மூழ்கிய சம்பா பயிர் : தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை

மழை நீரில் மூழ்கிய சம்பா பயிர் : தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை

நீரில் மூழ்கிய சம்பா பயிர்

நீரில் மூழ்கிய சம்பா பயிர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் துார்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாற்று நட்டு 15 நாட்களே ஆன சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களுக்கு கூடுதலாக 10 ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா-தாளடிக்கு 13.5 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 சதவீத நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த காலங்களில் சம்பா, தாளடிக்கு போதுமான தண்ணீர் இல்லாததால், மின்மோட்டாரை கொண்டு நடவு பணியை செய்தனர். ஆனால் தற்போது, ஆறுகளில் தண்ணீர் வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள், வாய்க்கால் தண்ணீரை கொண்டும், மின்மோட்டார் தண்ணீரை கொண்டு சம்பா தாளடி நடவுப்பணியை தொடங்கி உள்ளனர்.

சம்பா-தாளடி நடவுப்பணிக்காக கடந்த மாதம் வயலை உழுது, சமம்படுத்தி, விதை தெளித்தனர். பின்னர் 30 நாட்களுக்கு பிறகு, நாற்றுக்களை பறித்து, வயலில் நடவு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்யப்பட்டு 15 நாட்களே ஆன சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டை, நரியனுார், கோணியக்குறிச்சி, மெலட்டூர், திட்டை, ஆகிய பகுதிகளில் நாற்று நட்டு 15 நாட்களே ஆன விளைநிலங்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வயலில் மழை நீர் தேங்கியிருப்பதால், நடவு செய்யாமல் விவசாயப்பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்தாண்டு, துார் வாரும் பணியின் போது பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை மட்டும் துார் வாரி விட்டு, வடிகால் வாய்க்காலை துார் வாராமல் விட்டு விட்டனர். இதனால் பெய்து வரும் பலத்த மழையினால் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் வயலிலேயே தேங்கி நிற்கின்றது. இதனால் நாற்றாங்காலிலுள்ள நாற்றுக்களை பறித்தாலும், அந்த நாற்றுக்களை, வயல்களில் நடவு செய்ய முடியாமல், கடந்த 4 நாட்களாக போட்டு வைத்துள்ளனர்.

மழை நீரில் முழ்கி நாற்றுக்கள் இருப்பதால், இளம் நாற்றுக்கள் அனைத்தும் அழுகி வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நடவு செய்ய முடியாமல், நாற்றுக்கள் அழுகி வருகின்றது. இதனால் நாற்றங்காலிருந்து பறிப்பது, வயலில் வந்து போடுவது வரை ஏக்கருக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் வரை செலவாகியுள்ளது அனைத்தும் வீணாகி வருகின்றது.

Must Read : ஆயுத பூஜைக்கு வாழைத்தார் விற்பனை மந்தம் : கவலையில் சிவகங்கை விவசாயிகள்

எனவே, மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வடிகால் வாய்க்கால்கள் துார் வார வேண்டும், தவறும் படசத்தில் சம்பா, தாளடி சாகுபடி கேள்வி குறியாகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: