தஞ்சாவூர் கோவில் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்
ஸ்டாலின், காயமடைந்தவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், இந்த விபத்து விவகாரத்தில் அரசியல் பார்க்கக்கூடாது என்பதுதான் தனது எண்ணம் என்றும் விளக்கம் அளித்தார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது, சப்பர உலா நடைபெற்ற நிலையில். அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சப்பரம் உரசியதில் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், 11 பேர் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அங்கிருந்து தஞ்சாவூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழக அரசின் நிவாரண தொகையான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் சப்பரம் விபத்து.. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்
பின்னர், இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயில் திருவிழாவில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்த செய்திக்கேட்டு வேதனை அடைந்தேன், துடிதுடித்து போனேன்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டேன், மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு தமிழக அரசின் நிவாரண தொகையையும் திமுக சார்பிலான நிவாரண தொகையையும் வழங்கினேன்.
மேலும் படிக்க: அயோத்தியா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த உத்தரவு ரத்து
படுகாயமடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் ரூபாயும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும், திமுக சார்பில் காயமடைந்த அனைவருக்கும் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலை வைத்து சிலர் அரசியல் செய்ய பார்க்கின்றனர். இந்த விசயத்தில் அரசியல் செய்யக்கூடாது. போற்றுவார், தூற்றுவார் பற்றி கவலைப்படுவதில்லை' என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.