தஞ்சை மாநகரம் அருகே களிமேடு அப்பர் திருவிழாவையொட்டி நடந்த, தேர் திருவிழாவில், மின்சாரம் தாக்கி, 3 சிறுவர்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 8 பேரின் உடல்கள் களிமேட்டில் உள்ள சுடுகாட்டில் இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இந்த இறுதி சடங்கின் போது, "எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்செத்தால் வந்துதவுவார் ஒருவரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன்அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.." என்ற அப்பர் திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலை உள்ளம் உருக சிலர் உரக்கப் பாடினார்கள். ஆற்றவொணா துயரத்தை ஆற்றும் வகையில் அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஆறாகப் பெருகிறது.
"தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.." என்று அனைவரும் முழக்க, ஒரே நேரத்தில், 6 பேரின் உடல்களுக்கு தீ மூட்டப்பட்டது. இரு சிறார்களின் உடல்கள் புதைக்கப்படுகின்றன.
"முன்னை இட்ட தீ முப்புரத்திலேபின்னை இட்ட தீ தென் இலங்கையில்அன்னை இட்ட தீ அடிவயிற்றிலேயானும் இட்ட தீ மூள்க மூள்கவே.." என்ற பட்டினத்தாரின் பாடலை போல, மயானமே பற்றி எரிவதை போல தீ கொளுந்து விட்டு எரிகிறது. வெளியில் நெருப்பின் உக்கிரம் தாக்க, உள்ளே சோகம் தணலாய் கொதிக்க, மெளனமாய் கலைகின்றனர் உற்றார், உறவினர்கள்.
Also Read : நள்ளிரவு வரை படித்துவிட்டு தூங்க சென்ற சிறுவன்.. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சோகம்..
அப்பர் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடிய, 11 பேர் ஒரே நொடியில் உயிரிழந்த சம்பவம், கடவுள் குறித்த அவநம்பிக்கையை அப்பகுதியில் விதைத்திருக்கும் என்று அனைவரும் கருதலாம். ஆனால், அதற்கு நேர்மாறாக இறந்தவர்கள் இறுதிச் சடங்கு நடந்த மயானத்தில் ஊரே ஒன்று கூடி தேவாரம் பாடிய சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, மயானத்தில் தேவாரம் பாடிய அய்யம்பேட்டையே சேர்ந்த சரவணனிடம் கேட்டோம். "திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலிருந்து ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புகலூர் அக்னீஸ்வர் கோயில். இத்தலத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை ஒட்டி நடக்கும் அப்பர் திருவிழாதான் பெரிய திருவிழா.
அன்றைய தினம், "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே.." என்று திருநாவுக்கரசர் பாடிக்கொண்டே, அக்னி பிழம்பாய் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இதேபோல, திருநாவுக்கரசர் திருநட்சத்திரத்தில், அவரைப் போலவே களிமேட்டில் அவரது அடியார்கள் அக்னியாய் இறைவனிடம் இரண்டறக் கலந்ததுள்ளனர்.
இந்த நிகழ்வு, சைவ நீதியின் மேலான எங்களது நம்பிக்கையையும், திருநாவுக்கரசர் மீதான பக்தியையும் எங்களுக்கு பன்மடங்கு அதிகரிக்க செய்கிறது. தொடர்ந்து அப்பர் திருவிழாவை வெகு சிறப்பாக நடத்துவோம்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car Festival, Tanjore