ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேச சொல்லி, சிலர் ஊருக்குள் வந்து நிர்ப்பந்தம் செய்வதாக
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் பள்ளியில் படித்துவந்த அரியலூரைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி தொடர்ந்து கட்டாயப்படுத்தியன் காரணமாகத் தான் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது. பள்ளியை மூட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேரைக் கொண்ட உண்மைக் கண்டறியும் குழுவை பா.ஜ.க நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில் மாணவி படித்த பள்ளிக்கூடம் உள்ள மைக்கேல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் எங்கள் கிராமத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருந்துவருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இதுவரை இப்பகுதியில் மதமாற்றம் என்கிற பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் இதை சிலபேர் தவறாக பரப்பி வருகின்றனர்.
மேலும், எங்களை ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேச சொல்லி சிலர் நிர்பந்தம் செய்வதாகவும், இப்பிரச்சினை தொடர்பாக யாரும் எங்கள் பகுதி வரக்கூடாது அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.