பட்டுக்கோட்டை அருகே வீட்டில் கோபித்து கொண்டு சென்ற பெண் சடலமாக கண்டெடுப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது சூரப்பள்ளம் கிராம். இங்குள்ள பெரிய ஏரியின் மேல்கரை பகுதியில் பெண் ஒருவர் தென்னந்தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது பக்கத்து வயலில், நாய் தரையைத் தோண்டுவதைக் கண்டு சந்தேகமடைந்து அருகாமையில் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஏதோ உடல் புதைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ சரவணனிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஏஓ சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அதில் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் காவல்துறையினர், பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு நேரமாகிவிட்டதால், உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி அன்னபூரணி ( வயது 52) என்பது தெரியவந்தது. அன்னபூரணி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நகைக்காக கொலை செய்தனரா அல்லது சொத்து பிரச்சனை தொடர்பாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.