கொரோனா டெஸ்ட் எடுக்கவந்த வேனை பார்த்து ஓட்டம் பிடித்த மக்கள்.. தைரியமாக டெஸ்ட் எடுத்த 93 வயது தாத்தா

மிட்டாய் தாத்தா

நாங்கள் இந்த பகுதிக்கு வந்ததும், அனைவரும் சோதனை மேற்கொள்ள வருமாறு மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். அறிவிப்பை கேட்டதும், அப்பகுதி மக்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஒளிந்து கொண்டனர்.

 • Share this:
  தஞ்சாவூரில் கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஓடி ஒளிந்த மக்கள், 93 வயது மிட்டாய் தாத்தா, தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்தை அறிந்து, ஒவ்வொருவராக முன்வந்து பிரிசோதனை செய்துகொண்டனர். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள், மிட்டாய் தாத்தாவை வெகுவாக பாராட்டினர்.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து சிறப்பு முகாம் அமைத்தும், நடமாடும் ஆய்வகங்கள் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், மாவட்டத்தில் தினசரி கிட்டத்தட்ட 5,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

  இதனிடைய, நடமாடும் ஆய்வகங்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் கண்டறிந்துள்ளது. அந்தவகையில், கீழவாசல் அருகே உள்ள ஆட்டுகார தெருவில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, அந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள பிறருக்கும் பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி பணியாளர்கள் அங்கு வருகை தந்தனர்.

  தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அனைவரும் சோதனை மேற்கொள்ள வருமாறு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டும், நாடமாடும் சோதனை வாகனத்தை பார்த்தும், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.

  ஒரு சிலர் சோதனை மேற்கொள்ள வந்த அதிகாரிகளின் கண்ணில் படாமல் வீட்டிற்குள் ஓடி ஒளிந்தும் கொண்டனர். எனினும், அந்த பகுதி மக்களால் மிட்டாய் தாத்தா என்றழைக்கப்படும் முகமது அபுஜாலி என்ற 93 வயது முதியவர் மட்டும், தைரியமாக தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டார். மிட்டாய் தாத்தா பரிசோதனை மேற்கொண்டதை அறிந்த அப்பகுதி மக்கள் ஒவ்வொருவராக முன்வந்து சோதனை செய்துகொள்ள தொடங்கினர்.

  இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்த மாநகராட்சி பணியாளர் ஒருவர் கூறும்போது, நாங்கள் இந்த பகுதிக்கு வந்ததும், அனைவரும் சோதனை மேற்கொள்ள வருமாறு மாநகராட்சி ஆணையர் அறிவித்தார். அறிவிப்பை கேட்டதும், அப்பகுதி மக்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஒளிந்து கொண்டனர். அதில் ஒருவரை பிடித்து நாங்கள் சோதனைக்கு வருமாறு அழைத்தபோது, அவர் மறுத்துவிட்டார். ஏதற்காக பரிசோதனை செய்துகொள்ள மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று அவரிடம் விசாரித்த போது, எங்களது மொத்த குடும்பத்தையும் தனிமைப்படுத்தி விடுவீர்கள் என்ற தனது அச்சத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: