காரைக்கால் கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. பஞ்சவர்ணத்தின் மகன் கும்பகோணம் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புதுவை மாநிலம் கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஆவார். இவரது மகன் வெற்றி செல்வன் (வயது 42) இவரது மனைவி ராஜேஸ்வரி ( வயது 34 ) இவர்களுக்கு ஹன்சிகா (6) என்ற மகளும் உள்ளார். வெற்றிச்செல்வன் கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி மாலை தனது சொந்த ஊரான கோட்டுச்சேரியில் இருந்து காரில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. வெற்றிச்செல்வன வீடு திரும்பாததால் அவரது உறவினர்களும், நண்பர்களும் வெற்றி செல்வனை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் வெற்றிச்செல்வன் மனைவி ராஜேஸ்வரி தனது கணவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் கார் ஒன்று வெகுநேரமாகியும் ஒரே இடத்தில் இருந்ததாகவும், காரின் அருகில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அருகிலிருந்த ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காரின் அருகே இருந்த நபர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காரை ஆய்வு செய்த ரயில்வே போலீஸார் காரின் உள்ளே இருந்த செல்போனை எடுத்து அதில் தொடர்புகொண்ட எண்களை விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் இறந்தவர் கோட்டுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. பஞ்சவர்ணத்தின் மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் வெற்றிச்செல்வன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.