Home /News /tamil-nadu /

எம்.சாண்ட் ஒப்பந்தம் போட்டு வெண்ணாற்றில் மண் எடுப்பதா.. கோடிகளில் மோசடி? - விவசாயிகள் குற்றச்சாட்டும் அதிகாரிகளின் விளக்கமும்

எம்.சாண்ட் ஒப்பந்தம் போட்டு வெண்ணாற்றில் மண் எடுப்பதா.. கோடிகளில் மோசடி? - விவசாயிகள் குற்றச்சாட்டும் அதிகாரிகளின் விளக்கமும்

வெண்ணாறு

வெண்ணாறு

Vennaru river : எம்-சாண்டிற்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு, உரிய அனுமதி இன்றி யூனிட் யூனிடாக  வெண்ணாற்றில் இருந்து மணல் எடுப்பதாகவும், இதனால் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், வெண்ணாற்றில் இருந்து மணல் எடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த பூதலுார், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் பாசன வசதி பெற, 148 கி.மீ தூரத்துக்கு முதன்மை வழித்தடமாக கல்லணை கால்வாயும், 636 கி.மீ., தூரத்துக்கு கிளை வாய்க்கால்களையும் ஆங்கிலேயர்கள் வெட்டினர். அத்துடன், 694 நீர்ப்பிடிப்பு ஏரிகள் உருவாக்கப்பட்டன. இதன் வாயிலாக, 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கல்லணை கால்வாயில் இருந்து பாசனத்துக்காக, ஆரம்பத்தில் வினாடிக்கு, 4,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின் பராமரிப்பு இன்றி போனதால் கரைகள் பலவீனமானது. இதனால் 3,000 கனஅடி தண்ணீர் திறந்தாலே, கரைகளில் உடைப்பு ஏற்படும் நிலை உருவானது. இதனால், கடைமடைக்கு ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, கல்லணை கால்வாயை முறையாக புனரமைக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் அடிப்படையில், கல்லணை கால்வாயை புனரமைப்பு செய்ய, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம், 2,639.15 கோடி ரூபாய் நிதியுதவி பெறப்பட்டது. பின், புனரமைப்பு பணியை கடந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கல்லணை கால்வாயில் பணிகள் 16 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, 94 கி.மீ தூரத்துக்கு கான்கிரீட் லைனிங் அமைத்தல், 1,339 மதகுகளை திரும்ப கட்டுதல், 21 கால்வாய் நீர்வழி பாலம் திரும்ப கட்டுதல், 12 கால்வாய் நீர் வழி பாலம் சீரமைத்தல், 24 நீரொழுங்கிகள் திரும்ப கட்டுதல். ஒரு நீரொழுங்கி புதிதாக கட்டுதல், 20 புதிய பாலங்கள் கட்டுதல், 10 பாலங்களை சீரமைத்தல் மற்றும் 308 ஏரிகள் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது பல்வேறு பகுதிகளில் இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதேபோல் கல்லணை அருகில் பாதரகுடியில் நடைபெற்று வரும் இந்த பணிகளுக்காக, உரிய அனுமதி இன்றி, அருகில் உள்ள வெண்ணாற்றில் இருந்து மணல் எடுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.  இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழக அரசு ஆற்றில் இருந்து ஒருபிடி மண்ணைக்கூட அல்ல கூடாது என உத்தரவிட்டு இருக்கிறது.

வெண்ணாறு


இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் மணல் குவாரியை அரசு திறக்கவில்லை. ஆனால் இவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக வெண்ணாற்றில் இருந்து மணலை அள்ளி வருகின்றனர். மேலும் பணிகளுக்கு எம்-சாண்ட் மணலுக்கு மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் எம் -சாண்ட்  மணலுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு அருகில் உள்ள வெண்ணாற்றில்  இருந்து இலவசமாக மணல் அள்ளுகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

வெண்ணாறு


இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முரண்பட்ட தகவலை தருகின்றனர். மணல் அள்ள அனுமதி இல்லை! ஆனால் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர் என கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். மேலும் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கல்லணை உள்ளது.

விவசாயி குற்றச்சாட்டு


தொடர்ந்து அதிக அளவில் மணல் அள்ளுவதால் கல்லணைக்கு பாதிப்பு ஏற்படும், இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டுகின்றனர். எனவே இதுகுறித்து விசாரணை நட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Must Read : சுத்தியலா? சாவியா?... பேரூராட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சொன்ன ரகசியம்!

இதுகுறித்து கல்லணை  உதவி செயற்பொறியாளர் புகழேந்தியிடம்  தொலைபேசியில் மூலம்  கேட்டபோது, நாங்கள் புணரமைப்பு பணிகளுக்காக வெண்ணாற்றில் இருந்து மணல் அள்ளவில்லை, கல்லணை கால்வாயில் உள்ள மணலை மட்டுமே பயன்படுத்துகிறோம் அதற்கும் உரிய அனுமதி பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: Sand, Tanjore

அடுத்த செய்தி