திமுக பெண் கவுன்சிலரின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி இன்னொரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் அப்துல் ரஜாக் (63). இவர் ராஜகிரியில் சொந்தமாக துணி கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹதிஜாபீவி கும்பகோணம் மாநகராட்சியில், தி.மு.க.வின் 3-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி அவரது மகன் முகமதுஆரிப் தந்தை வீட்டிற்கு சென்று பார்க்கும் போது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப் பட்டுள்ளதையும், அவரது தந்தை ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
Read More:மாசம் 30 ஆயிரம் கரெக்டா மாமூல் வரணும் - விடுதி மேனேஜரிடம் பணம் பறிக்க முயன்ற போலி எஸ்.ஐ
இது குறித்து முகமதுஆரிப் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, உத்தரவின்பேரில் இச்சம்பவம் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வடக்குமாங்குடி ஆற்றங்கரையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த மூன்று இளைஞர்களை பிடித்த போலீசார் விசாரித்த போது, அவர்கள் தான் இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து விஸ்வா(19), பாட்ஷா என்கிற ராஜசெல்வம்(29), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சூர்யா (27) என்கிற இளைஞர் அண்மையில் நடைபெற்ற இன்னொரு திருட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்துல்ரஜாக் வீட்டில் தனியாக தான் உள்ளார், மேலும் வெளிநாடு சென்றுவிட்டு இங்கு துணி கடை நடத்தி வருகிறார், அவரது மகன்கள் மூன்று பேர் வெளிநாட்டில் இருப்பதால் அதிக பணம் இருக்கும் எனவே எளிதில் கொள்ளையடித்துவிடலாம் என திட்டம் போட்டு கொள்ளையடிக்க சென்ற போது அவர் கத்தியதால் கொலை செய்தாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 24 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மற்றும் 5 பவன் நகை மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.