சர்ச்சைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே நகரில் பத்ம சேஷாத்ரி தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் துறையை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது முன்னாள் மாணவர்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.
அதாவது ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் மாணவிகளின் தோற்றம் பற்றி தவறான கருத்துகளைக் கூறுதல், இரவு நேரங்களில் அவர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்தல், வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது அவர்களை சங்கடத்திற்கு உள்ளாகும்படி பேசுதல் என ராஜகோபாலன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
இந்தவிவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்தநிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமியின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல்களை அனுப்பும்படி காவல்துறை கேட்டு கொண்டது. அதன்படி சுமார் 40 மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் வாட்ஸ் ஆப் மூலமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அனுப்பி உள்ளனர். அதில் 15 மாணவிகள் தமிழகத்தின் பிற பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
Also read: அடுத்தடுத்து 40 மாணவிகள் குற்றச்சாட்டு... பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா?
இந்நிலையில், பிரச்சினைக்குரிய பிஎஸ்பிபி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ''சென்னையில் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குக் கல்வித் துறை சார்பில், குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து போலீஸாரால் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குரூப்பைத் தேர்வு செய்ய 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நிலையில், எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிளஸ் 1 சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PSBB School, Sexual harassment