உயர்நீதிமன்ற உத்தரவு படி தனது போனை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளேன். வழக்கு நிலுவையில் இருப்பதால் வேறு எதவும் கூற முடியாது என மாணவியை வீடியோ எடுத்த முத்துவேல் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவிபெறும் பள்ளியில் பயின்று வந்த, அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில் எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஞாயிறன்று மாணவியின் பெற்றோர் தஞ்சையில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை பெற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தவில், மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்த வேண்டியதுள்ளது.
இதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல், வல்லம் முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை வல்லம் டிஎஸ்பி பிருந்தா முன்பு மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா, வீடியோ எடுத்த முத்துவேல் ஆகியோர் ஆஜராகினர். பெற்றோர் ஒவ்வொருவரிடம் சுமார் ஒரு மணி நேர விசாரணை நடைபெற்றது.
பின்னர் முத்துவேல் வீடியோ பதிவு செய்த செல்போனை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தார். விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியையும், பெற்றோரையும் கடந்த 17ஆம் தேதி பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றபோது, பெற்றோர் மாணவியிடம் விசாரித்தது தொடர்பாக தன்னை வீடியோ எடுக்க சொன்னார்கள். அதன் காரணமாக நான் வீடியோ எடுத்தேன். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி தற்பொழுது வந்து அந்த வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்து உள்ளேன். வழக்கு விசாரணையில் இருப்பதால் வேறு எதுவும் கூற முடியாது என வீடியோ எடுத்த முத்துவேல் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.