கும்பகோணம் அருகே தொன்மையான 5 அடி உயர நடராஜர் உலோக சிலையை, சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினர் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதி டி. மாங்குடியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்குச் சொந்தமான சிலை வடிக்கும் பட்டறையில் தொன்மையான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பிரிவின் திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன், செல்வராஜ், காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்று, சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்தினர்.
இதில், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 அடி உயரமும், ஏறத்தாழ 4 அடி அகலமும் கொண்ட தொன்மையான உலோக நடராஜர் சிலை இருப்பது தெரிய வந்தது. இச்சிலைக்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், சிலையைக் காவல் துறையினர் மீட்டனர். இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புக் காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர். இச்சிலை தமிழகத்தின் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சொந்தமானதா என்ற விவரம் வழக்கின் புலன் விசாரணையின் முடிவில் தெரிய வரும் எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
செய்தியாளர் : எஸ்.குருநாதன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.