தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தேர் பவனி நடைபெற்ற போது, தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் காயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தஞ்சாவூரில் நடந்த விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடுகிறேன்.
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the mishap in Thanjavur, Tamil Nadu. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 27, 2022
பிரதமர் அலுவலக நிவாரண நிதியிலிருந்து இந்த நிதி உடனடியாக விடுவிக்கப்படும். மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் " என்று அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
தஞ்சை தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து துயரமுற்றதாக கூறி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியை வழங்க உத்தரவிட்டு உள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர் தர சிகிச்சையளிக்க ஆணையிட்ட அவர், தஞ்சாவூர் களிமேடு கிராமத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும், காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.
Must Read : அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து- பள்ளி மாணவர்களின் செயல் குறித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு வேதனை வீடியோ
இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
வி.கே.சசிகலா
சசிகலா தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், “தஞ்சை, களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியடையவைக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். இது போன்ற திருவிழாக்களின்போது சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் உரிய பாதுகாப்பை அளித்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, Car Festival, Edappadi palanisamy, MK Stalin, Modi, Tamil News, Thanjavur