ஏழு பிள்ளைகளை பெற்றும் ஆதரவற்று நிற்கும் 101 வயது மூதாட்டி பெட்டி கடை வைக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே பொட்டுவாசாவடியை சேர்ந்தவர் குழந்தையம்மாள். அவருக்கு வயது (101). இவருக்கு 18 வயது இருக்கும் போது ஆரோக்கிய சாமி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 மகன், 3 மகள் என மொத்தம் ஏழு குழந்தைகள். இரண்டு குழந்தைகள் உயிரிழந்தவிட்டனர். மேலும் அவரது கணவர் ஆரோக்யசாமியும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணமும் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு விட்டு வெளியே வந்த குழந்தையம்மாள், பிறரின் உதவியை எதிர்ப்பார்க்காமல்,கடந்த 50 ஆண்டுகளாக, தஞ்சை கீழவாசல் பகுதியில் சாலையோரம் வியாபாரம் செய்து வருகிறார்.
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார். மேலும், அவர் வைத்துள்ள தள்ளு வண்டியிலே படுத்து கொள்வதாகவும், அருகில் உள்ள கடைகளில் சாப்பிட்டு கொள்வதாகவும் கூறுகிறார். மேலும் என் உயிர் உள்ளவரை தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன். என் பிள்ளைகள் ஆதரவு எனக்கு தேவையில்லை. 70 ஆண்டுகளாக பழம் வியாபாரம் செய்து வருகிறேன்.
பெட்டி கடை வைப்பதற்கு போதிய பணம் இல்லாததால் சாலையோரம் நின்று வியாபாரம் செய்கிறேன். தினமும் 3 வேளை சாப்பாடு கிடையாது. கிடைக்கிற காசில் கடையில் வாங்கி தான் சாப்பிடுகிறேன். இரவில் கீழ வாசலில் சாலையோரம் படுத்து தூங்குகிறேன்.
கடும்பனி, மழை பெய்தாலும் வேறு எங்கும் செல்ல மாட்டேன். தற்போது வெயில் சுட்டெரித்து வந்தாலும் குடை பிடித்தபடி வியாபாரம் செய்து வருகிறேன். கடைசி காலம் வரை யாருடைய தயவும் இல்லாமல் சொந்த காலில் தான் இருப்பேன். எனக்கு அரசாங்கம் சிறிய அளவில் பெட்டி கடை வைத்துக் கொடுத்தால் போதும். என அவர் தெரிவிக்கிறார்.
செய்தியாளர் : எஸ்.குருநாதன், தஞ்சாவூர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.