தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது.
இதனால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து இந்த விபத்தில், தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
Must Read : அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து- பள்ளி மாணவர்களின் செயல் குறித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு வேதனை வீடியோ
இந்நிலையில், இந்த விபத்துக்கு காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் போடப்பட்ட தார் சாலைதான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழைய சாலையை உடைத்து போடாமல் பழைய சாலை மீது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு சாலை போடப்பட்டதால் பக்கவாட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் நிலை தடுமாறி விழுந்ததும், இந்த விபத்து ஏற்பட்ட ஒரு காரணம் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக, தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்க வேண்டுமென அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தஞ்சை மேயர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என்று உறுதியளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.