உங்கள் தொகுதி : தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

Youtube Video

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சாவூரின் தற்போதைய நிலை என்ன... விரிவாக தெரிந்து கொள்ளலாம் இன்றைய உங்கள் தொகுதி... அறிந்ததும்... அறியாததும்... தொகுப்பில்...

 • Share this:
  சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்களால் தலைநகராகக் கொண்டு ஆளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஊர் தஞ்சாவூர்... இங்குள்ள பெருவுடையார் கோயிலும், அதனை கட்டிய ராஜராஜசோழனின் பெருமையும் அந்த கோயிலின் கோபுரம் போல் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி கம்பீரமாக நிற்கிறது. தமிழ்மொழிக்கென்ற அமைந்துள்ள ஒரே ஒரு பல்கலைக்கழகம் இங்கேதான் இருக்கிறது. தமிழ்நாடு என்ற எழுத்துகளை குறிக்கும் வகையில் இதன் கட்டடங்கள் இருக்கின்றன. சுமார் 500 ஆண்டுகள் பழமையான சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சாவூரின் வரலாற்று சாட்சி... 20 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுடன் நாகை, திருவாரூர், மயிலாடுதுறையுடன் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருத்தபோது தமிழகத்தின் நெற்களஞ்சியம் என பெயர் கிடைத்தது.

  இன்று பல மாவட்டங்களாக பிரிந்துபோனது ஒருபுறம் இருக்க 12 லட்சம் ஏக்கரில்தான் பயிர்கள் விளைகின்றன.. தஞ்சைக்கு வாழ்வளிக்கும் காவிரி, நதியாக ஊருக்குள் வராதபோதும் கல்லணைக் கால்வாய் மூலம் கரம் நீட்டுகிறது. கதம்ப சாம்பாரும், சந்திரகலா இனிப்பும் தஞ்சாவூரின் சுவையை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கின்றன... தலையாட்டி பொம்மை, மரக்குதிரை, வீணை, கலைத்தட்டு என தஞ்சாவூருக்கே உரித்தான கலைப்பொருட்களின் பட்டியல் பெரிது... முன்னாள் முதல்வர் கருணாநிதி 1962ம் ஆண்டு இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். தஞ்சாவூர் எப்போதுமே திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. இங்கு 9 முறை திமுக வென்றுள்ள நிலையில் காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

  2016ல் பணப்பட்டுவாடா புகாரில் 6 மாதங்கள் தாமதமாக நடந்த தேர்தலில் அதிமுகவின் எம்.ரெங்கசாமி இரண்டாம் முறையாக வென்றார். அமமுகவின் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் அவரும் ஒருவர். அதனால் 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் நீலமேகம் அதிமுகவின் காந்தியைவிட 33,980 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தற்போது நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க  2,88,900 பேரில் 1,50,678 பேர் பெண்கள், 1,38,166 பேர் ஆண்கள். 56 பேர் திருநங்கைகள் உள்ளனர்.

  வயல்கள் சூழ் ஊரான தஞ்சையில் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்னை, பெங்களூரு, திருச்சி என மற்ற நகரங்களுக்கு இடம்பெயரும் நிலை உள்ளது. அதனால் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

  விளைபொருட்களை மதிப்புக் கூட்டக் கூடிய ஆலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பிரச்னைகள் இருந்தாலும் தேர்தல் களத்தில் தங்களுக்கான அடுத்த எம்எல்ஏவை தேர்வு செய்ய தயாராகிவிட்டார்கள் மக்கள்.

  மேலும் படிக்க... உங்கள் தொகுதி : விருதுநகர் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

  திமுகவின் கோட்டை தஞ்சாவூர் என்ற பெருமையை தக்க வைக்குமா திமுக... இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றுமா அதிமுக... விடைகாண சில மாதங்கள் காத்திருப்போம்....

  வீடியோ:  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: