மின் கட்டணம் : தமிழக அரசுக்கும் சட்டப்பேரவைத் தலைவருக்கும் தங்கர் பச்சான் கோரிக்கை

இயக்குநர் தங்கர்பச்சான்

மின் கட்டணத்துக்கான மீட்டர் ரீடிங் மாதந்தோறும் எடுக்கப்படவேண்டும்

  • Share this:
    மின் கட்டணம் தொடர்பான அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், தமிழக அரசுக்கும் சட்டப்பேரவைத் தலைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்டால், நான்மட்டுமல்ல, தமிழக மக்கள் பல மடங்கு தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்காது என்ற எனது கருத்தும், இது தொடர்பாக முதலமைச்சருக்கு ஒரு குடிமகனாக எனது கோரிக்கையும் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளியாகின.

    அதன்பின்னர், மின் கணக்கை சரிபார்த்து, விளக்கம் அளிக்க என் வீட்டுக்கு இரண்டு முறை அதிகாரிகள் வந்தனர். மின் கணக்கீடு குறித்த விளக்கம் எனக்குத் தேவையில்லை என்றும், முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, மாதாந்திர மின் கட்டணம் குறித்த எனது கோரிக்கையையும் அவர்களிடம் நான் தெரிவித்தேன்.

    அதைப் புரிந்துகொண்ட அதிகாரிகள், கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றைக்கொடுத்து, அதைப் படமெடுத்துச் சென்றனர். அதன் பிறகு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது ட்விட்டர் பக்கத்தில், எனது மின் கணக்கு குறித்து விளக்கம் அளித்து விட்டதாகப் பதிவிட்டார்.

    அன்று மாலையே, என்னைச் சந்தித்த அதிகாரிகள் என்னுடன் எடுத்துக்கொண்ட படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டனர். அதில், எனக்கு விளக்கம் தேவையில்லை, கட்டணமுறை மாற்றம் தான் தேவை என்ற என் கோரிக்கையை தெளிவுடன் குறிப்பிட்டிருந்தனர்.

    செந்தில் பாலாஜி


    இந்நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. சம்பத்குமார் எழுப்பிய ஒரு கேள்விக்கு, மின் துறை அமைச்சர் பதில் அளிக்கும்போது, மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக சமூக வலைதளங்களில் நான் புகார் தெரிவித்ததாகவும், அதற்கு உடனே அதிகாரிகள் விளக்கம் அளித்து விட்டதாகவும், அதன் பின் நான் ‘சாரி’ என்று கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

    அத்துடன், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான தவறான செய்திகளை நான் வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த செய்தியைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அமைச்சருக்கு எழுதித் தந்த அதிகாரிகள்தான், இந்த தவறான, பொய்யான செய்தியை அமைச்சருக்குத் தந்தார்களா? எதனால் என்னுடைய கோரிக்கை இறுதிவரை புரிந்துக் கொள்ளப்படாமல் போனது என்பதை அமைச்சர்தான் தெரியப்படுத்த வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மின் கட்டணத்துக்கான மீட்டர் ரீடிங் மாதந்தோறும் எடுக்கப்படவேண்டும் என்பது எனது கோரிக்கை மட்டுமல்ல, கொரோனா பெருந்தொற்றில் வேலையிழந்து, தவித்துக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கை என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

    Must Read : செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    அத்துடன், சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இடம்பெற்றுவிட்ட, என்னைக் குறித்த தவறானப் பதிவை நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரி, இதையே சட்டப்பேரவைத் தலைவருக்கும் எனது கோரிக்கையாக அளிக்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published: