• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • மாதமொரு முறை மின் அளவீடு செய்க: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்!

மாதமொரு முறை மின் அளவீடு செய்க: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தல்!

மின் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திய தமிழக மக்களை இந்த இரண்டு மாத கால திமுக ஆட்சி மீண்டும் இருளில் தள்ளியுள்ளது. இன்வெர்ட்டர் உபகரணத்தை வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று தங்கமணி விமர்சித்துள்ளார்.

 • Share this:
  தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி மாதம் ஒருமுறை மின் கட்டணம்  கணக்கிடும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று திமுக தலைமையிலான அரசை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தற்போதைய திமுக ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். தேர்தலின் போது  திமுக தலைவர் ஸ்டாலின் அள்ளி வீசிய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் முதன்மையானது வீடுகளுக்கான மின் பயன்பாட்டு கணக்கெடுப்பை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையில் இருந்து மாதம் ஒரு முறையாக மாற்றி அமைக்கப்படும் என்பது தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜூலை மாதம் 1ஆம் தேதி எடுக்கவேண்டிய மீட்டர் ரீடிங் மின்வாரிய ஊழியர்களால் எடுக்கப்படவில்லை, சென்ற 2019 மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டண தொகையை செலுத்தும்படி இந்த அரசு தெரிவித்தது. 2019ஆம் ஆண்டு கொரோனா காலம் கிடையாது, அப்போது கோடை காலம், பொதுமக்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தினர். அதே கட்டணத்தை இப்போதும் கட்ட சொல்லவே மக்கள் பெரிதும் குழப்பம் அடைந்தார்கள் என்றும் கொரோனா ஊரடங்கால் குறைவான மின்சாரம் உபயோகப்படுத்தி இருந்தாலும் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தங்கமணி கூறியுள்ளார்.

  மேலும், சென்னை மாதவரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கௌதமன் அவரது மனைவி கருமாரி அவரது இரண்டு வீட்டிற்கு மின் கட்டண 36 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று மாதாவரம் மின்வாரியம் தெரிவித்ததாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாகவும் தற்போது அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளது’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  இதையும் படிங்க: அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா- உடனடியாக வெளியேறிய எடப்பாடி பழனிசாமி: மருத்துவமனையில் பரபரப்பு!


  சென்னை போன்ற பெருநகரங்களில் குத்துமதிப்பாக ஒரு கணக்குப் போட்டு மின் வாரியத்தால் ஆன்லைன் மூலம் பில் அனுப்பப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற பயத்தில் மக்கள் மின் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இதைவைத்து அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதாக டெபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று கூறியுள்ள அவர், மின் பிரச்சினை இல்லாமல் சந்தோஷமாக வாழ்க்கை நடத்திய தமிழக மக்களை இந்த இரண்டு மாத கால திமுக ஆட்சி மீண்டும் இருளில் தள்ளியுள்ளது. இன்வெர்ட்டர் உபகரணத்தை வாங்க வேண்டிய சூழ் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்.

  மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை தற்போதைய திமுக ஆட்சியாளர்கள் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளதாக குறிப்பட்ட அவர்,  கடந்த சில நாட்களாக  நெல்லை, தூத்துக்குடி, தென்காசி திண்டுக்கல், மதுரை, உட்பட பல மாவட்டங்களில் பல மணி நேரம் பகலிலும் இரவிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி படுகிறார்கள். மீண்டும் மின்கம்பிகளில் துணி காயப்போடும் சூழ்நிலை வந்துவிட்டதே என்று மக்கள் புலம்புவதாக தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு.. பொதுமக்கள் அவதி!


  தமிழகத்தில் மின் கட்டணம் தற்போது இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக வசூலிக்கப்படுவதுடன் டெபாசிட் தொகையையும் செலுத்த சொல்வதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறியுள்ள அவர்,  ஊரடங்கு காலத்தில் மக்கள் உரிய வருமானமின்றி தவித்து வரும் சூழ்நிலையில், இது போன்ற பொருளாதார சுமையை ஏற்படுத்துவது மேலும் தமிழக மக்களை பாதிப்படையச் செய்துள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

  மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கு எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும், ஆகஸ்ட் மாதம் முதல் மாதந் தோறும் மீட்டர் ரீடிங் எடுக்கும் வகையில் மின்சார வாரியத்திற்கு இந்த அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லையெனில் மின்வெட்டும் அதிக மின் கட்டணம் செலுத்த இயலாத தவிக்கும் மக்களின் கோபக் கனலுக்கு இந்த அரசு ஆளாகும்  என தங்கமணி எச்சரித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: