வருமானத்துக்கும் அதிகமாக 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தன்னுடைய வீட்டில் சோதனை நடைபெற அமைச்சர் செந்தில்பாலாஜியே காரணம் என்றும், சோதனை நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாகவும் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுகவை வளரவிடாமல் தடுக்கவே முக்கிய புள்ளிகளை குறிவைத்து, திமுக அரசு சோதனை என்ற பெயரில் பழிவாங்குவதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு முன்பு ரெய்டில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் விவரங்களை காணலாம்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில், கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். கரூர், சென்னை என மொத்தம் 21 இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில், 25 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, பண்ணை வீடு, அலுவலகங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. இதில் நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், பரிவர்த்தனை ஆவணங்கள், 2 கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய 35 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில் 34 லட்ச ரூபாய், 9 சொகுசு கார்கள், 623 சவரன் நகைகள், 7 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
நான்காவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 48 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. இதில் நகைகள், பணம், பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின.
Must Read : தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு
இந்நிலையில், தற்போது ஐந்தாவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்படதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Directorate of Vigilance and Anti-Corruption, DVAC, Senthil Balaji