தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அமைய வேண்டும் என, திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். அக்கேள்விகள் பின்வருமாறு,
"தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனுக்கு ஊறு...
Posted by Thangam Thenarasu on Thursday, July 9, 2020
”தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 'ஆன்லைன்' மூலமாகப் பாடங்கள் நடத்தப்படும் எனவும், வரும் ஜூலை 13-ம் தேதி முதலமைச்சர் அதனைத் துவங்கி வைப்பார் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்நிலையில், பாடங்கள் 'ஆன்லைன்' வாயிலாக நடத்தப்படமாட்டாது எனவும் மாறாகத் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்து அண்மைக்காலமாகப் பள்ளிக்கல்வித்துறை தவறாது கடைப்பிடித்து வரும் 'வழக்கப்படி' மாண்புமிகு அமைச்சர் அவர்கள் 'இன்றைக்கு அந்தர்பல்டி' அடித்து இருக்கின்றார்.
மேலும் பார்க்க:-
தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்படும், நடைமுறைச் சிக்கல்கள் சரிசெய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
நாளொரு அறிவிப்பும், பொழுதொரு மறுப்பும் அமைச்சருக்கும், இந்தத் துறைக்கும் புதிதல்ல என்றாலும், இத்தகைய தெளிவில்லாத நிலைப்பாடுகளும், மாறுபட்ட செய்திகளும் இலட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும், ஆசிரியச் சமுதாயத்தையும், ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் அனைவரையுமே பெருங்குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியனவாகும்.
1. அமைச்சர் அவர்களின் தற்போதைய அறிவிப்பும் கூட பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுவதாகவே அமைந்திருக்கின்றது.
தொலைக்காட்சிகள் வாயிலாகப் பாடம் நடத்தப்படும் எனில், எத்தனை தொலைக்காட்சிகளில் எந்தெந்த வேளைகளில் எவ்வளவு நேரம் பாடங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன?
2. எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்களுடன் அதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன? தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பங்கு இதில் என்ன?
3. எந்தெந்த வகுப்புகளுக்குத் தொலைக்காட்சி வாயிலாகப் பாடம் நடத்த உத்தேசிக்கப்பட்டு இருக்கின்றது? பாட வேளைகளுக்கான பாட அட்டவணை தயார் செய்யப்பட்டுவிட்டதா?
4. பள்ளிகள் திறப்பு, வகுப்பறை நடவடிக்கைககள், இந்தக் கல்வியாண்டுக்கானப் பாடத்திட்டங்கள் மற்றும் பள்ளிக்கல்வி சார்ந்த பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது இறுதிப் பரிந்துரையினை அரசுக்கு அளித்துவிட்டதா?
5. இக்குழு அளித்த இடைக்கால அறிக்கையில் தொலைக்காட்சி வாயிலாகப் பாடங்கள் நடத்தப் பரிந்துரை ஏதேனும் செய்துள்ளதா அல்லது எதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்காமல் முதலமைச்சரை உவகை கொள்ளச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவசர அறிவிப்பாக இதை அமைச்சர் வெளியிட்டு இருக்கின்றாரா?
6. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த ஆண்டு 30 சதவிகிதம் பாடங்களைக் குறைத்துள்ள சூழலில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முடிவென்ன?
7.இந்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றதா? அதற்கான பாடங்கள் வரையறை செய்யப்பட்டுவிட்டனவா?
8.தொலைக்காட்சிகளில் குறிப்பிட்ட நேரவரையறைக்குள் நடத்தப்படும் வகையில் ஒவ்வொரு பாடங்களும் தயார் செய்யப்பட்டுள்ளனவா? பாடங்களை நடத்த உரிய ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளனரா?
9. அவ்வாறாயின், தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுவதற்கான பயிற்சி ஏதேனும் அத்தகு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றதா?
10. தொலைக்காட்சி வழியே பாடங்கள் நடத்தும் போது மாணவர்களுக்கு இயல்பாக எழும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் நேரிடையாகக் கேட்டுத் தெளிவு பெற முடியாததாகையால் பாடங்களைப் பொறுத்து மாணவர்களின் ஐயங்களை நீக்கித் தெளிவு படித்த என்ன ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன?
11. மாணவர்கள் அதுகுறித்துத் தத்தம் வகுப்பு ஆசிரியர்களிடமே விவாதித்துத் தெளிவு பெற வகை செய்யும் வண்ணம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய ‘ வாட்ஸ்அப்’ குழுக்கள் போன்றவற்றையோ அல்லது வேறு சில முறையான ஏற்பாடுகளையோ மேற்கொள்ள அரசு உத்தேசித்திருக்கின்றதா?
12. ஆன்லைன் வகுப்புகள் குறித்த மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சி குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா?
இதுபோன்ற இன்னும் பல ஏராளமான கேள்விகள் அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
எனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் முடிவுகளும், முயற்சிகளும் நமது மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனுக்கு ஊறு ஏதும் விளைவிக்காத வண்ணமும்; அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் முறையில் அமையப் பெறுதற்குத் துணை புரியும் வகையிலும், வள்ளுவப் பெருந்தகையின் 'எண்ணித் துணிக கருமம்' என்ற வாக்கின்படி அமைய வேண்டும் எனவும் அதனையொட்டி அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து விடாமல் செய்வன திருந்தச் செய்து, இந்தத் துறை ‘இருள்தீர எண்ணிச் செயல்’ புரிய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.