• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 'தங்கத் தந்தை' பட்டம்

குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 'தங்கத் தந்தை' பட்டம்

அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி விழாவை தொடக்கி வைத்தார்.

 • Share this:
  குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்கு தங்கத் தந்தை பட்டம் வழங்குவதுடன், வீட்டு மனைப் பட்டா அல்லது அரசின் முக்கிய உதவித் திட்டம் பெற்றுத் தரப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக கரூரில், குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து கவுரவிக்கும் விழா இன்று நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி விழாவை தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது-

  ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கருத்தடை செய்துகொள்வோருக்குத் தங்கத் தந்தை விருது வழங்கி கவுரவிக்கப்படுவதுடன் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகை வேண்டாம் என்றால், இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டில் உள்ள முதியவர் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை, விலையில்லாக் கறவை மாடு, வெள்ளாடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் இலவச கால்நடைக் கொட்டகை, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையதாரர் இல்லாமல் வங்கிக் கடன் உதவி, வேளாண்மைத் துறையின் மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பெற்றுக் கொள்ளலாம்.

  இவை தவிர, தோட்டக்கலைத் துறை மூலமாக தென்னை, பல அடுக்குப் பயிர் திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.40,000 வரை மானியம் வழங்குதல், விவசாயிகளுக்கு சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.445 வீதம் 50 சதவீத மானியத்துடன் 1000 ச.மீ. அளவில் பசுமைக் குடில் திட்டத்தின் மூலம் பாலித்தீன் குடில் அமைத்துத் தருதல், சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.355 வீதம் 50 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக 4 சதுர மீட்டர் வரை நிழல் வலை கூடாரம் அமைக்க நிதி உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல் போன்ற ஏதேனும் ஒரு அரசுத் திட்டத்தில் முன்னுரிமையளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்''
  இவ்வாறு அவர் பேசினார்.

  ஆண் கருத்தடை சிகிச்சை சிறப்பு அம்சங்களாக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

  1.ஓரிரு நிமிடங்களில் செய்து விடலாம்.

  2. மயக்க மருந்து கொடுப்பதில்லை.

  3.மருத்துவமையில் தங்க வேண்டியது இல்லை.

  4. சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம்

  5.கத்தி இன்றி, இரத்த சேதம் இன்றி செய்யப்படுகிறது.

  6. தையல் இன்றி, தழிம்பு இன்றி செய்யப்படுகிறது.

  7. ஆண்மை குறைவு ஏற்படாது.

  8.பின் விளைவுகள் எதும் இருக்காது.

  9.இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி முன்பு போலவே இருக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Musthak
  First published: