நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
தூத்துக்குடி செல்வதற்காக இன்று காலை
சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரி, 2 மடிக்கணினியை கையில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறி அமைச்சரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பயணிகள் 2 மடிக்கணினியை கையில் எடுத்துச்செல்லக்கூடாது என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது என அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, தான் தமிழக நிதியமைச்சர் என்பதையும் அந்த அதிகாரியிடம் அவர் தெரியப்படுத்தி, இந்தியிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எனினும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சை பொருட்படுத்தாது, அந்த அதிகாரி 2 மடிக்கணினியுடன் பயணிக்க அனுமதிக்க முடியாது என்ற தனது முடிவில் உறுதியாக இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய உயர் அதிகாரிகள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரினர். தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு பின்னர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரியும், அமைச்சர் பழனிவேலிடம் மன்னிப்பு கோரினார். இதன் பின்னரே அங்கு பரபரப்பு குறைந்து, இயல்பு நிலை திரும்பியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2 மடிக்கணினிகளுடன் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக, கடந்த வருடம் டெல்லிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சர்ச்சையானது.
திமுக எம்.பி கனிமொழி, விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு, அவர், "நீங்கள் இந்தியனா?" என்று அவரிடம் கேட்டுள்ளார். இந்த சம்பவத்தை கனிமொழி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
மேலும், இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார். இந்த சம்பத்தை நினைவுகூறும் வகையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் இன்று சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.