குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால், அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தற்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வெயிலுக்கு இதமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் நீண்ட நேரமாக குளித்து மகிழ்ந்தனர். அத்துடன், வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் நோக்கில், அருவிகளில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக கோடை நேரத்தில் அருவியில் தண்ணீர் கொட்டுவதால், மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
Also read... அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பிரச்னை - பட்டவர்த்தி கிராமத்தில் 5 நாட்களுக்கு 144 தடை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டகாணல் உட்பட அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால், கடந்த இரு நாட்களாக கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து சற்று அதிகரித்தது. மேலும், நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. தொடர் விடுமுறை வரவுள்ள நிலையில் அருவியில் தண்ணீர் அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் வரத்து அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-செய்தியாளர்: செந்தில். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.