Tenkasi | தென்காசி மாவட்டம் கடையத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு திமுக பிரமுகரிடம் கேட்காமால் திறக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகளுடன் வந்து அதிகாரிகளிக்கும், விவசாயிகளுக்கும் திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் 4,000 ஏக்கருக்கும் மேலாக பிசான சாகுபடி விவசாயம் பயிர்செய்த நிலையில் தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. இந்த அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் வருடந்தோறும் கடையத்தில் அரசால் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெற்களை விற்பனை செய்து பயனடைவார்கள்.
இந்த நிலையில் இந்தாண்டு திடீரென்று வழக்கமான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் வைக்காமல், கடையம் அருகே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கானாவூரில் புதியதாக வைத்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். இதனை தொடர்ந்து இப்பகுதி விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரியிடமும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு கொடுத்ததை தொடர்ந்து கடையத்தில் மீண்டும் நெல் கொள்முதல் நிலையம் நேற்று துவங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் நெற்களை கடையம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
விற்பனை நிலையத்திற்க்கு திடீரென அங்கு வந்த அரசியல் கட்சியினர் (தி.மு.க) அங்கிருந்தவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி திடீர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிறிது கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிந்த காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தினர்.
இதனால் அதிர்ச்சியுற்ற விவசாயிகள் சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகி ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடையம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.
விவசாயிகளிடம் பிரச்சனை ஏற்படுத்த காரில் வந்த திமுக கட்சியினர்.
இது குறித்து விவசாயி பேசும் போது , ஒழுங்கா விவசாயி நெல்ல போட்ருக்கான். ஒழுங்கா தொழில் நடக்குது. இங்கனகுள்ள அடியாட்களோட வந்து நின்னுட்டு, ஆபீசரையும் சத்தம் போட, விவசாயியையும் இங்க நெல்லு கொண்டு வராதனு சொல்ல இவன் யாருயா? இவன் ஒரு அரசியல் வாதி நாங்க விவசாயி. விவசாயிகள் நாங்க போராட்டம் பண்ணித் தான் இங்க கொள்முதல் நிலையம் கொண்டு வந்துருக்கோம். இங்கன அறுத்து இங்கன போடத் தான் இந்த குடோன நாங்க கேட்டோம். ரொம்ப தூரம் கொண்டு போக எங்க கிட்ட எதுவும் இல்லை. நான் அறுப்பு அறுக்கனும்னு வண்டி தேட போய்ட்டேன். அதுக்குள்ள இங்கன வந்து பிரச்னை பண்ணிக்கிட்டு இருக்காங்கயா
ஒரு வண்டியில வந்துருக்காங்க வந்து இதுமாதிரி அராஜகம் பண்ணுறாங்க. போலீசும் எங்களை பேச விடல. நீங்க உள்ள போங்கனு சொல்லுறாங்க. நான் இப்ப உங்ககிட்ட ( நியூஸ்18 நிரூபரிடம்) விளக்கம் சொல்லுறேன்ல அதுமாதிரி போலீஸ் காரங்க என் கிட்ட விளக்கம் கேக்கல.
நாங்க விவசாயிகளுக்குள்ள ஆபீசர பாத்தோம். பிரச்னைய சொன்னோம். கலெக்டர் வரை போனோம். எங்க வேணா நீங்க டெண்டர் குடுங்க. எங்களுக்கு இப்ப இது வேணும் என சொன்னோம். குடுத்தாங்க. இப்ப இது செயல்பட்டுக்கிட்டு இருக்கு என விவசாயி நியூஸ்18 தொலைக்காட்சி நிரூபரிடம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : ச.செந்தில், தென்காசி மாவட்டம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.