ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'நானும் ஜெயிலுக்கு போறேன்' வடிவேல் போல் அண்ணாமலை பேசி வருகிறார் - அமைச்சர் சேகர் பாபு

'நானும் ஜெயிலுக்கு போறேன்' வடிவேல் போல் அண்ணாமலை பேசி வருகிறார் - அமைச்சர் சேகர் பாபு

சேகர் பாபு - அண்ணாமலை

சேகர் பாபு - அண்ணாமலை

BJP Annamalai | சினிமாவில் வடிவேல் வசனம் பேசுவது போல் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தென்காசி மாவட்டத்தில் பிரசித்திபெற்றதும் பழமைவாய்ந்ததுமான பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவிலில் பக்தர்கள்  மலைமீது சென்று தரிசனம் செய்யும் வகையில் இரண்டு புதிய பேருந்துகளை அருணாசல செட்டியார் அன்பளிப்பாக வழங்கினார். இந்த சேவை பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர்பாபு கொடியசைத்து துவக்கிவைத்து கோவில் பகுதிகளையும் ஆய்வு செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இதுவரை ரூ.2,450 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறைவன் சொத்து இறைவனுக்கே என்பதை உறுதி செய்யும் ஆட்சி மு.க.ஸ்டாலின் ஆட்சி.

ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள கோயில்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி போதவில்லை என்பதை அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திட்டத்தில் 129.50 கோடியாக வைப்பு நிதி இருந்தது. கூடுதலாக 129.50 கோடி வழங்கியவர் தமிழக முதல்வர்.  அந்த நிதியால் 12 ஆயிரத்து 957 கோயில்களில் ஒரு கால பூஜை தடையின்றி நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.

Also Read : எஸ்சி/எஸ்டி பிரிவினரை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்... பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்

யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  நானும் ஜெயிலுக்கு போகிறேன் என்று வடிவேல் கூறுவதுபோல் அண்ணாமலை பேசி வருகிறார். அவரது வயதையும் தாண்டி 100 ஆண்டுகளை கடந்த திராவிட இயக்கத்தின் தொடர் பரிணாம வளர்ச்சிதான் திமுக. யாருடைய பயமுறுத்தலுக்கும் திமுக அஞ்சாது.  யார் தவறு செய்தாலும் சட்டப்படி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

ஒருவர் குற்றம் செய்து சவால் விட்டால் அவர் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்ய தமிழக அரசு தயங்காது. தன் மீது கைது நடவடிக்கை இல்லை என்பதை தெரிந்துகொண்டு முடிந்தால் கைது செய்யுங்கள் என்று அண்ணாமலை சவால் விடுக்கிறார்.

ஏதாவது ஒரு வகையில் தன்னை முன்னிலைப்படுத்தவும், தனது பெயர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் வர வேண்டும் என்பதற்காகவும் பேசி வரும் இப்படிப்பட்டவர்களின் பேச்சுக்கு பதில் சொல்லிக்கொண்டு எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எங்கள் பயணம் மக்களை நோக்கி செல்கிறது என்றார்.மேலும் பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலிலும் விரைவில் முதல்வரின் ஆணை பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் திரு.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் திரு.கோபாலசுந்தரராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் திருமலை குமார், பழனி, மற்றும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : செந்தில், , தென்காசி 

Published by:Vijay R
First published:

Tags: Annamalai, BJP, DMK, Minister Sekar Babu