Home /News /tamil-nadu /

பேரூராட்சி தலைவர் தேர்தலில் கெத்து காட்டும் அதிமுக... தேர்தலை சந்திக்க தயங்கும் திமுக - பரபரக்கும் குற்றாலம் அரசியல்..

பேரூராட்சி தலைவர் தேர்தலில் கெத்து காட்டும் அதிமுக... தேர்தலை சந்திக்க தயங்கும் திமுக - பரபரக்கும் குற்றாலம் அரசியல்..

குற்றாலம்

குற்றாலம்

Tenkasi District : குற்றாலத்தின் வருமானம் மற்ற நகராட்சிகளின் ஓர் ஆண்டு வருமானத்தை விட அதிகமாக உள்ளதால் இதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகின்றது. வாடிக்கையாக ஆளும் கட்சிகளை சேர்ந்தவர்கள் இதன் தலைவர்களாக இருந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி 22ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 21 மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர் நகராட்சி தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் என மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்டு நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அன்றைய தினமே பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட 60 பதவிகளுக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி ,தேர்வுநிலை பேரூராட்சி அடங்குகிறது. குறைந்த மக்கள் தொகை 8 வார்டுகளில் மட்டுமே உள்ள இந்த பேரூராட்சியின் வருமானம் அருகிலுள்ள தென்காசி நகராட்சியில் வருமானத்தை விட அதிகம். வருடத்தில் ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய சீசன் காலங்களில் குற்றாலத்தின் வருமானம் மற்ற நகராட்சிகளின் ஓர் ஆண்டு வருமானத்தை விட அதிகமாக உள்ளதால் இதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. வாடிக்கையாக ஆளும் கட்சிகளை சேர்ந்தவர்கள் இதன் தலைவர்களாக இருந்துள்ளனர்.

குற்றாலம் பேரூராட்சியில் 8 வார்டுகள் உள்ள நிலையில் 1, 5, 7, 8 ஆகிய 4 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது 2 ,3 ,4 ,6 ஆகிய நான்கு வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் சம பலத்தில் இருப்பதால் தலைவர் தேர்தலில் கடும் போட்டி ஏற்பட்டது.  உறுப்பினர் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம், பரிசுப் பொருள் ஆகியவை வழங்கப்பட்டதாகவும் வாக்கு ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும், வெள்ளிப் பொருட்கள் , வழங்கப்பட்டதாகவும் திமுக, அதிமுக என இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் மாறிமாறி குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிமுகவின் கவுன்சிலர்கள் அந்தக் கட்சி தலைவர் வேட்பாளரான கணேஷ் தாமோதரன் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேர்தல் நாளன்று பேரூராட்சி அலுவலகம் வராததால் போதிய உறுப்பினர்களின் இன்றி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மார்ச் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.



மீண்டும் மார்ச் 26ம் தேதி அதற்கான ஏற்பாடுகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. செயல் அலுவலர் மாணிக்கராஜ் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் உதவி ஆணையர்கள் ராஜ மனோகரன் தேர்தல் நடத்தும் அலுவலராக உன்துணை ஆட்சியர் சீலா தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் 9:30 மணிக்கு துவங்கிய நிலையில் 9 மணிக்கு அதிமுக கவுன்சிலர்கள் கணேஷ் தாமோதரன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் வந்தனர். 9.50 மணி வரை காத்திருந்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் யாரும் அலுவலகத்திற்கு வராமல் புறக்கணித்துள்ளனர். இதன் காரணமாக இன்றும் கவுன்சிலர்களின் கோரம் இல்லாத நிலை ஏற்பட்டது இதன் காரணமாக இரண்டாம் முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டது

திமுக சார்பில் குமார் பாண்டியன் தலைவர் வேட்பாளராக போட்டியிட கூடும் என தெரிய வந்துள்ள நிலையில் தேர்தலை சந்திக்க அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. நான்கு திமுக உறுப்பினர்கள் குமார் பாண்டியனுக்கு வாக்களிக்கும் நிலையில் கூடுதல் வாக்குகளை அதிமுக தரப்பிலிருந்து பெற முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன் முயற்சி செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட செயலாளருமான குட்டியப்பாவின் பாதுகாப்பில் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக கடுமையான முயற்சி செய்தும் ஆளும் திமுகவின் கூடுதல் வாக்குகளை பெறுவதற்கான உறுதியை, அதிமுக கவுன்சிலரின் ஆதரவைப் பெறமுடியவில்லை.



தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திமுகவால் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் வெற்றி பெற முடியவில்லை சங்கரன்கோவில் நகராட்சியில் குலுக்கல் முறையிலேயே அதன் தலைவர் திமுகவை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குற்றாலம் பேரூராட்சி பொருத்தவரை இருதரப்பும் மல்லுகட்டும் நிலையில் ஆளும் தரப்பால் வெற்றி பெற முடியாதது அவர்களுக்கான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தென்காசி வந்துள்ள சாத்தூர் ராமச்சந்திரன் இரண்டாம் கட்டமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. மூன்று முறை தேர்தலை ஒத்தி வைத்து நான்காவது முறையில்  மட்டுமே  வரும் உறுப்பினர்களை கொண்டு  தேர்தல் நடத்த முடியும் என்பது தேர்தல் ஆணையத்தால் வைக்கப்பட்டுள்ள விதியாக உள்ளது.



குற்றாலம் பேரூராட்சியில் இரண்டு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்றாம் முறையும் ஒத்திவைக்கப்படுமா அல்லது ஆளும் கட்சியின் பலம் வெற்றி பெறுமா அதிமுக  தனது பலத்தை நிரூபித்து விடுமா ? எவ்வாறு இருந்தாலும் இரு முறை தேர்தலுக்கும்  திமுக உறுப்பினர்கள் வராதது அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பேரூராட்சி தலைவர் 5 ஆண்டுகளாக செயல்படாத நிலையில்  மக்கள் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  தற்போது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும் தலைவர் து.தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளதால் குற்றாலம் பேரூராட்சி செயல்பட முடியாமல் உள்ளது. அடுத்த 2 மாதங்களில் குற்றால சீசன்  தொடங்கும். 2 ஆண்டுகள் கெரோனாவால் குளிக்க தடை இருந்தது இந்தாண்டு தொற்று குறைந்ததால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வர வாய்ப்புள்ளது.    சீசன் துவங்கும் முன்பாவது தலைவர்,  து. தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட வேண்டும்.

செய்தியாளர் : P.S. சிவமணி
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tenkasi

அடுத்த செய்தி