தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பான்குளம் அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான ராஜ்குமார். வெல்டிங் வேலை செய்து வந்தார். கடையநல்லூர் அடுத்த அச்சன்புதூர் கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர், தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் வசிப்பது ராஜ்குமாரின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. சிறிது நாட்கள் அனுசரித்துக் கொண்டால் தனி வீடு எடுத்து போகலாம் என்று மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார் ராஜ்குமார்.
ஆனால் தனி குடித்தனம் போவது ராஜ்குமாரின் குடும்பத்திற்கும் அவரை வளர்த்த பாட்டிக்கும் பிடிக்கவில்லை என்று தெரிகின்றது. மேலும் ராஜ்குமாரின் பாட்டி குடும்பத்தை பிரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் மனைவி பக்கம் பேசுவதா, பாட்டி சொல்வதை கேட்பதா என்று குழப்பத்தில் இருந்துள்ளார் ராஜ்குமார். இதனால் கடந்த பத்து நாட்களாக யாரிடமும் பேசாமல், நண்பர்களையும் சந்திக்காமல் இருந்துள்ளார்.
Also read: சிபிஐ-யிடமிருந்து காணாமல் போன 104 கிலோ தங்கம் - திருட்டு வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
கடந்த புதன்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்ற ராஜ்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கடந்த வியாழக்கிழமை காலை ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோவில் பின்புறம் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் ஆய்வில், இறந்து கிடந்தது ராஜ்குமார் தான் என்பதும் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
வழக்குப் பதிவுசெய்த ஆழ்வார் குறிச்சி போலீசார், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இளம் வயதில் காதல் திருமணம் செய்த இளைஞர் மூன்றே மாதங்களில் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.