டெண்டர் ஒதுக்கியதில் ஊழல்: முதல்வர் மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்

news18
Updated: September 12, 2018, 7:00 PM IST
டெண்டர் ஒதுக்கியதில் ஊழல்: முதல்வர் மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
news18
Updated: September 12, 2018, 7:00 PM IST
நெடுஞ்சாலைக்கு டெண்டர்கள் ஒதுக்கியதில் ஊழல் நடந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில்  ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,500 கோடி மதிப்பிலான டெண்டர்களை தனது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி   ஒதுக்கியதாகவும், இதில் முறைகேடு நடந்ததாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதனை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாக்கல் செய்தனர். அதில் டெண்டர் நடைமுறைகள் அனைத்தையும் உலக வங்கி கண்காணித்து வருவதால் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அதில் முதல்வரின் உறவினர்கள் என்ற ஒற்றை காரணத்திற்காக அவர்களை டெண்டர் பெற தகுதியற்றவர்களாக கருத முடியாது என்றும் குறிப்பிட்டப்பட்டது. புகாருக்குப் பிறகு கடந்த ஜூலையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதால் முதலமைச்சர் மீதான புகாரை அவசர கதியில் விசாரிக்க அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, டெண்டர் பெற்றவர்களுக்கும் முதலமைச்சருக்குமான தொடர்பு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நிபுணர் குழு விசாரணை நடத்தியதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், புகார் கொடுத்த நாள் முதல் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளை ரகசியமாக வைக்க வேண்டும் என்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்