Home /News /tamil-nadu /

கொரோனாவால் தள்ளிப் போன பத்து புத்தகக் காட்சிகள் - தவிக்கும் தமிழ்ப் பதிப்பாளர்கள்

கொரோனாவால் தள்ளிப் போன பத்து புத்தகக் காட்சிகள் - தவிக்கும் தமிழ்ப் பதிப்பாளர்கள்

கோப்புப்படம்

கோப்புப்படம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லாத் தொழில்களையும் போலவே பதிப்புத் தொழிலும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு ஊர்களில் நடைபெற்றிருக்க வேண்டிய பத்து புத்தகக் காட்சிகள் தள்ளிப் போயுள்ளன. இதனால் கிட்டத்தட்ட 40 முதல் 50 கோடி இழப்பு தமிழ்ப் பதிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மலையாளத்தில் உள்ள டிசி புக்ஸ், கரண் புக்ஸ், ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்டு பதிப்பகம் போல தமிழில் பெரிய பதிப்பாளர்கள் யாரும் கிடையாது. புத்தகம் விற்றுத் தான் அன்றாட வாழ்க்கை நடத்த வேண்டிய சிறிய பதிப்பாளர்களே தமிழில் அதிகம் என்பதால் இந்த ஊரடங்கு காலம் மிக சவாலானதாக இருப்பதாக பாரதி புத்தகாலய பதிப்பாளர் மற்றும் பபாசி துணைத் தலைவர் நாகராஜன் கூறுகிறார்.

“சென்னை, கோவை, மதுரை தவிர மற்ற ஊர்களில் புத்தகக் கடைகள் பல கிடையாது. எனவே புத்தகக் காட்சிகளை மட்டுமே நம்பியிருக்கும் பல பதிப்பாளர்கள் உள்ளனர். புத்தகக் காட்சி நடைபெறும்போது தான் அந்தந்த ஊர்களில் வசூலிக்க வேண்டிய பாக்கி தொகையை பதிப்பாளர்கள் பெறுவார்கள். ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் காட்சி தலா 10 கோடி வருமானம் ஈட்டி தரும். கோவை. தருமபுரி, மேட்டுப்பாளையம், கரூர், ஓசூர் என தள்ளிப்போன பல ஊர்களின் புத்தகக் காட்சிகள் மூலம் 40 முதல் 50 கோடி வரை கிடைத்திருக்கும்” என்கிறார் நாகராஜன்.

நாகராஜன், பாரதி புத்தகாலயம்.


புத்தகக் காட்சிகளை பெருமளவு நம்பியிருக்கும் சிறிய பதிப்பகங்களில் ஒன்று பரிசல். பதிப்பாளரால் அதன் கடை வாடகையைத் தர முடியாததால் நண்பர்கள் சிலர் உதவ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சிவ. செந்தில்நாதன், பரிசல் பதிப்பகம்.


“மாதம் 11,000 வாடகை. நண்பர்கள் உதவியதால் மட்டுமே சமாளிக்க முடிந்தது. அரசு நூலக ஆணை வழங்கும்போது நூலகப் பணியாளர்கள் நலவாரிய தொகை பிடிக்கப்படுகிறது. கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக அந்தத் தொகை பயன்படுத்தப்படவே இல்லை. பதிப்பாளர்களை நம்பி பிற பல தொழில்கள் உள்ளன. வெளியிட திட்டமிடப்பட்டிருந்த 20 முதல் 25 புத்தகங்கள் முடங்கியுள்ளன. எனக்கு டிடிபி செய்து தரும் பெண்மணி வேலை இல்லாததால் தனது வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வேறு இடத்துக்கு மாறிவிட்டார்" என்கிறார் பதிப்பாளர் சிவ. செந்தில்நாதன்.

ஊரடங்கு காரணமாக சென்னையிலிருந்த தங்கள் அலுவலகத்தை மூடிவிட்டது காலச்சுவடு பதிப்பகம். பணியாளர்கள் பணிக்கு வர இயலவில்லை, கிடங்கில் பராமரிப்பு செய்ய இயலவில்லை என பல்வேறு சிக்கல்கள் காரணமாக நாகர்கோவிலிலிருந்து தற்போது இயங்குகிறது அந்தப் பதிப்பகம்.

கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்.


மேலும் ஓர் ஆண்டுக்கு புத்தகக் காட்சிகள் நடத்த இயலாத சூழல் நிலவுவதால் ஆன்லைன் மூலம் தீர்வுகள் தேடி நகர்வதாக பதிப்பாளர் கண்ணன் தெரிவிக்கிறார். "ஆன்லைன் புத்தகக் காட்சி நடத்த தீவிரமாக ஆலோசித்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம். புத்தகக் காட்சிக்கு நேரடியாக வருவது போன்ற அனுபவத்தை ஏற்படுத்த முயல்கிறோம். அனைத்து கடைகளிலும் வேண்டிய புத்தகங்களைத் தேர்வு செய்து கடைசியாக கட்டணம் செலுத்தலாம். அந்தத் தொகை சம்பந்தப்பட்ட பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் சென்று சேரும். புத்தகக் காட்சியில் பங்குபெற விரும்புவோர் சிறு தொகை செலுத்தி பங்கேற்கலாம்" என்கிறார்.

ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து நடைபெறும் பதிப்பாளர்களுடனான இணைய வழி கூட்டங்கள் மூலமாக காலச்சுவடு பதிப்பகத்தின் ஒன்பது நூல்கள் மராத்தியில் மொழிபெயர்க்க ஒப்பந்தம் ஆகியுள்ளன. நேரடியாக புத்தகங்களை வீடுகளில் டெலிவர் செய்ய ஸ்விக்கி நிறுவனத்திடம் கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஊரடங்கு காலத்தினால் பதிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பீடு ஒருபுறம் என்றால், சமூகத்தில் மேலெழும்பும் பல பிரச்னைகளை விவாதிக்க வெளியில்லாமல் போய்விட்டதாக நாகராஜன் வருந்துகிறார். "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு, புதிய கல்விக் கொள்கை என பல விசயங்கள் குறித்து பலதரப்பட்ட கருத்துகளுடன் நூல்கள் இந்நேரம் வந்திருக்கும்" என்கிறார்.
Published by:Rizwan
First published:

Tags: Book Fair, Lockdown

அடுத்த செய்தி